கிரிக்கெட்

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் + "||" + India looking to extend a successful journey Today's clash with Afghanistan

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

சவுதம்டன், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

வலுவான இந்தியா

10 அணிகள் பங்கேற்றுள்ள 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் சவுதம்டனில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் 28–வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக காணப்படும் இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காத அணிகளில் ஒன்றாகும். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா புரட்டியெடுத்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

விஜய் சங்கர் சந்தேகம்?

தங்களது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் உள்ள இந்திய அணிக்கு, குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் இருந்து பெரிய அளவில் குடைச்சல் இருக்காது. என்றாலும் அந்த அணியில் ரஷித்கான், முகமது நபி ஆகிய உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் கவனமுடன் ஆடுவது அவசியமாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் வெளியேறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் சில ஆட்டங்களில் ஆட முடியாது என்பதால் அவருக்கு பதிலாக முகமது ‌ஷமி இடம் பெறுவார். அதே சமயம் பயிற்சியின் போது பந்து தாக்கி கால்பாதத்தில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் ஓரளவு தேறி விட்டார். ஒரு வேளை முழு உடல்தகுதியை எட்டாவிட்டால் இளம் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் அல்லது அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம்.

விஜய் சங்கர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் என்னால் விளையாட இயலும் என்று நம்புகிறேன். பந்து வீச்சில் என்னை மேம்படுத்திக்கொள்ளவே எப்போதும் உழைக்கிறேன். தற்போதைய விட இன்னும் என்னால் சிறப்பாக பவுலிங் செய்ய முடியும். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவருடன் நான் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக இணைந்து ஆடிய அனுபவம் உள்ளது. அதன் மூலம் அவரது பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 397 ரன்களை விட்டுக்கொடுத்து மிக மோசமாக தோற்றது. ரஷித்கான் 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கி சொதப்பினார். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு அவர் எந்த அளவுக்கு சவால் கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்படின் நைப் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியா மிகச்சிறந்த அணி. உலக கோப்பையை வெல்ல வா£ய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இங்கிலாந்துக்கு எதிரான மோதல் ரஷித்கானுக்கு மோசமான நாளாக அமைந்தது. அவரது பந்து வீச்சை அடித்து நொறுக்குவது எளிதல்ல. எல்லா சிறப்பும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களையே சாரும். இப்போது அதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார்’ என்று குறிப்பிட்டார்.

இதுவரை...

இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. உலக கோப்பையில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அது உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் 50–வது வெற்றியாக அமையும். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

பிற்பகல் 3 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர் அல்லது ரிஷாப் பண்ட், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ‌ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆப்கானிஸ்தான்: நூர் அலி ஜட்ரன், குல்படின் நைப், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி, அஸ்ஹார் ஆப்கன், முகமது நபி, ரஷித்கான், இக்ரம் அலி, அப்தாப் ஆலம், தவ்லத் ஜட்ரன், முஜீப் ரகுமான்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. வானிலையை பொறுத்தவரை போட்டி நடக்கும் சவுதம்டனில் இன்று வெயில் அடிக்கும், மழை வாய்ப்பு இல்லை என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா வெஸ்ட்இண்டீஸ்?

உலக கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் பலப்பரீட்சையில் இறங்குகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றி, ஒரு முடிவில்லை என்று 9 புள்ளியுடன் உள்ள நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஆவலில் உள்ளது. அந்த அணியில் வில்லியம்சன், ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில் ஆகியோர் பேட்டிங்கிலும், டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டுகிறார்கள். இவர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம், கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர் ஆகிய ஆல்–ரவுண்டர்களும் பக்கபலமாக இருக்கிறார்கள்.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளியுடன் உள்ளது. இந்த ஆட்டத்தில் தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். கடைசி இரு ஆட்டங்களில் கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல் ஆகிய அதிரடி சூரர்களின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி வாழ்வா–சாவா? நெருக்கடியில் தவிக்கும் நிலையில் இவர்கள் எழுச்சி பெற்றால் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும்.

உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 4–ல் நியூசிலாந்தும், 3–ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.