‘‘அரைஇறுதிக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது’’ வங்காளதேச வீரர் தமிம் இக்பால் நம்பிக்கை


‘‘அரைஇறுதிக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது’’ வங்காளதேச வீரர் தமிம் இக்பால் நம்பிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 21 Jun 2019 9:18 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு தகுதி பெற இன்னும் தங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு தகுதி பெற இன்னும் தங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வங்காளதேசம் தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நாட்டிங்காமில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் சதத்தின் (166 ரன்) உதவியுடன் 5 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 333 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 102 ரன்களும் (நாட்–அவுட்), மக்முதுல்லா 69 ரன்களும், தமிம் இக்பால் 62 ரன்களும் எடுத்தனர். தோல்வியை தழுவினாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.

வங்காளதேச அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ளது. தோல்விக்கு பிறகு வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் நிருபர்களிடம் கூறியதாவது:–

அனுபவம் இல்லை

இது போன்ற ‘மெகா’ இலக்கை விரட்டிப்பிடிப்பதில் (சேசிங்) எங்களுக்கு போதிய அனுபவம் கிடையாது என்பதே உண்மை. பேட்டிங்கின் போது நான் ஸ்கோர் போர்டுவை பார்க்கவில்லை. முதல் 30 ஓவர்களுக்குள் 180 முதல் 200 ரன்கள் சேர்க்க வேண்டும், எஞ்சிய 20 ஓவர்களில் மீதமுள்ள ரன்களை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் விளையாடினேன். ஆரம்பத்திலேயே ரொம்ப ஆக்ரோ‌ஷமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து விட்டால் அதன் பிறகு 330–340 ரன்களை நெருங்குவது கூட சாத்தியமில்லாமல் போய் விடும். அதே சமயம் கடைசி 20 ஓவர்களில் 160 முதல் 170 ரன்களை விரட்டிப்பிடிப்பது 20 ஓவர் கிரிக்கெட்டில் சர்வ சாதாரணம். அந்த அடிப்படையில் தான் முயற்சித்தோம். துரதிருஷ்டவசமாக எங்களது எண்ணம் ஈடேறவில்லை. முக்கியமான கட்டத்தில் ‌ஷகிப் அல்–ஹசன் (41 ரன்) ஆட்டம் இழந்தது பின்னடைவாக அமைந்தது.

கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களிலும் 320 ரன்களுக்கு மேல் குவித்தது சாதகமான அம்சமாகும். அதுவும் 2–வது பேட்டிங்கின் போது இவ்வளவு ரன்கள் எடுத்தது பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். ஆஸ்திரேலியாவை 320 முதல் 330 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு கிடைத்திருக்கும். எங்களது பந்து வீச்சை திரும்பி பார்த்தால் குறிப்பிட்ட 3–4 ஓவர்கள் தான் எங்களது தோல்விக்கு காரணம் என்பது புரியும்.

அரைஇறுதி வாய்ப்பு

இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் எங்களது அடுத்து சுற்று வாய்ப்பு முடிந்து விட்டதாக எந்த வீரர்களும் நினைக்கவில்லை. அரைஇறுதிக்கு முன்னேற இன்னும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம். எதுவும் சாதகமாக அமையாத பட்சத்தில் மட்டுமே புள்ளி பட்டியலில் 5–வது இடத்தை பிடிப்பது குறித்து யோசிப்போம்.

இவ்வாறு தமிம் இக்பால் கூறினார்.


Next Story