ஒரு பதவியில் மட்டும் இருங்கள்: கங்குலி, லட்சுமணுக்கு கிரிக்கெட் வாரிய அதிகாரி வேண்டுகோள்


ஒரு பதவியில் மட்டும் இருங்கள்: கங்குலி, லட்சுமணுக்கு கிரிக்கெட் வாரிய அதிகாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 21 Jun 2019 9:37 PM GMT)

சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பயிற்சியாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர்களாக உள்ளனர்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பயிற்சியாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர்களாக உள்ளனர். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராக லட்சுமணும் செயல்படுகிறார்கள். இவர்கள் ஒரே நேரத்தில் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் பொறுப்பு வகிப்பதாக சர்ச்சை கிளம்பியது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விசாரணை நடத்தினார். அவர்களும் தங்களது விளக்கத்தை அளித்தனர்.

இந்த நிலையில் விதிமுறைப்படி இரண்டு பதவிகளில் ஒன்றை மட்டுமே அவர்கள் வகிக்க முடியும் என்பதை டி.கே.ஜெயின் தெளிவுப்படுத்தியுள்ளார். இரு வாரத்திற்குள் ஒரு பொறுப்பில் இருந்து விலகும்படி அறிவுறுத்தியுள்ளார். ஜெயின் கூறுகையில் ‘லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் முக்கியமானது ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும் என்பது ஆகும். அதை நான் நிச்சயம் அமல்படுத்த முயற்சிப்பேன். சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் இருந்து விலகி விட்டதால் அவர் மீது இரட்டை ஆதாய பிரச்சினை எழவில்லை. கங்குலி, லட்சுமணை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றி எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். விதிமுறை என்ன? என்பது அவர்களுக்கு தெரியும் என்பதால் இந்த விவகாரத்தில் உத்தரவு எதுவும் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.’ என்றார்.


Next Story