கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி + "||" + World Cup Cricket: Bangladesh win by 62 runs

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது.
சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 62 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தினார்.


10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் சவுதம்டனில் நேற்று நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் ஆசிய கண்டத்தை சேர்ந்த வங்காளதேசம்- ஆப்கானிஸ் தான் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்படின் நைப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டான் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே அடித்து ஆடிய லிட்டான் தாஸ் (16 ரன், 17 பந்து, 2 பவுண்டரி) முஜீப் ரகுமான் பந்து வீச்சில் ஹஸ்மத்துல்லா ஷகிடியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 4.2 ஓவர்களில் 23 ரன்னாக இருந்தது. அடுத்து ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பாலுடன் இணைந்தார். நிதானமாக ஆடிய தமிம் இக்பால் 53 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நபி பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதைத்தொடர்ந்து முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 20.3 ஓவர்களில் வங்காளதேச அணி 100 ரன்னை கடந்தது. சிறப்பாக ஆடிய ஷகிப் அல்-ஹசன் 66 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 45-வது அரைசதம் இதுவாகும். இந்த உலக கோப்பை தொடரில் ஷகிப் அல்-ஹசன் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 5-வது முறையாகும். அரைசதத்தை எட்டிய சிறிது நேரத்தில் ஷகிப் அல்-ஹசன் (51 ரன்கள், 69 பந்து, ஒரு பவுண்டரி) முஜீப் ரகுமான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் கண்ட சவுமியா சர்கார் (3 ரன்) முஜீப் ரகுமான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் அவுட் ஆனார். இதனை அடுத்து மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். தவ்லத் ஜட்ரன் பந்து வீச்சில் முஷ்பிகுர் ரஹிம் சிக்சர் விளாசி தனது அரைசதத்தை எட்டினார். அந்த அணி 40.5 ஓவர்களில் 200 ரன்னை தாண்டியது. மக்முதுல்லா (27 ரன்) குல்படின் நைப் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். நிலைத்து நின்று ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 87 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் தவ்லத் ஜட்ரன் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

கடைசி பந்தில் மொசாடெக் ஹூசைன் (35 ரன், 24 பந்து, 4 பவுண்டரி) குல்படின் நைப் பந்து வீச்சில் போல்டு ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.

பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 47 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் வங்காளதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் குல்படின் நைப் 47 ரன்னும், சமியுல்லா ஷின்வாரி ஆட்டம் இழக்காமல் 49 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார். 7-வது ஆட்டத்தில் ஆடிய வங்காளதேச அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது.

1,000 ரன்களை கடந்தார், ஷகிப் அல்-ஹசன்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 35 ரன்னை எட்டிய போது உலக கோப்பை போட்டி தொடரில் 1,000 ரன்களை கடந்த முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் இந்த இலக்கை எட்டிய 19-வது வீரர் என்ற சிறப்பையும் தனதாக்கினார். ஷகிப் அல்-ஹசன் உலக கோப்பை போட்டியில் இதுவரை 27 ஆட்டங்களில் ஆடி 1,016 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் ஷகிப் அல்-ஹசன் 6 ஆட்டங்களில் ஆடி 476 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற விதம் நியாயமற்றது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
3. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதும், சுழற்பந்து வீச்சாளர்கள் சோடை போனதும் புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது.
4. உலக கோப்பை வெற்றி; பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறுவாரா?
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து வென்ற நிலையில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
5. உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி திடுக்!
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.