இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? - வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை


இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? - வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 27 Jun 2019 12:30 AM GMT (Updated: 27 Jun 2019 12:30 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

மான்செஸ்டர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதால் ஒவ்வொரு நாளும் போட்டி மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் கோதாவில் குதிக்கின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (நியூசிலாந்துக்கு எதிராக) என்று 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறையை உறுதியாகி விடும்.

பெரிய அணிகளை புரட்டியெடுத்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏனோ-தானோ என்று விளையாடி வெறுப்பேற்றியது. குட்டி அணி என்று வர்ணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, முகமது ஷமி, பும்ராஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எப்படியோ 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியில் இருந்து தப்பியது. இந்த ஆட்டத்தில் மிடில் வரிசையில் டோனியின் பேட்டிங் (52 பந்தில் 28 ரன்) மிகவும் மந்தமாக காணப்பட்டது. ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூட டோனியின் பேட்டிங் குறித்து அதிருப்தி தெரிவித்தார். ரோகித் சர்மா (2 சதத்துடன் 320 ரன்), கேப்டன் விராட் கோலி (3 அரைசதத்துடன் 244 ரன்), லோகேஷ் ராகுல் ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கும் நிலையில் டோனி உள்ளிட்ட மிடில் வரிசை பேட்ஸ்மேன்களும் கணிசமான ஸ்கோர் குவிக்க வேண்டியது அவசியமாகும். வெஸ்ட் இண்டீசின் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (4 ஆட்டத்தில் 7 விக்கெட்) ஆணிவேராக இருக்கிறார். ஓவருக்கு சராசரியாக 4.92 ரன் வீதம் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள பும்ராவை தான் அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட புவனேஷ்வர்குமார் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்ட போதிலும் அணி நிர்வாகம் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாது என்று தெரிகிறது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி தொடர்ந்து நீடிப்பார்.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டியது. அதன் பிறகு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக மண்டியிட்டது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

6 ஆட்டத்தில் வெறும் 3 புள்ளி மட்டுமே எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போது அரைஇறுதி வாய்ப்பு நூலிழை அளவுக்கு தான் ஒட்டிக்கொண்டுள்ளது. அதுவும் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் உயரிய ரன்ரேட்டுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அதிரடி சூரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்டிங்கில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சில வீரர்களின் ஆட்டங்கள் மட்டுமே ‘கிளிக்’ ஆவதால் வெற்றிப்பாதைக்கு பயணிக்க முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கார்லஸ் பிராத்வெய்ட்டின் சதத்தின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை நெருங்கி வந்து 5 ரன்னில் தோற்று போனது. கிறிஸ் கெய்ல் (10 சிக்சருடன் 194 ரன்), நிகோலஸ் பூரன் (163 ரன்), ஹெட்மயர் (171 ரன்), பிராத்வெய்ட் (131 ரன்), ஷாய் ஹோப் (187 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் பார்மில் உள்ளனர். இவர்கள் ஒருசேர ஜொலித்தால் நிச்சயம் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு ஆடுவார்களா? என்பது தான் கேள்விக்குறி. கால் முட்டி காயத்தால் ஆந்த்ரே ரஸ்செல் விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல் (9 விக்கெட்), ஒஷானே தாமஸ் (7 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார்கள்.

போட்டி நடக்கும் மான்செஸ்டரில் இன்று மழை வாய்ப்பு இல்லை. வெயில் அடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் உலர்வாக இருக்கும் போது பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இங்கு இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி கண்டிருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் அங்கம் வகிப்பதால் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், இவின் லீவிஸ் அல்லது சுனில் அம்ப்ரிஸ், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story