கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல் + "||" + TNPL. Cricket: Inaugural match of the Chepauk Super Gillies - Dindigul Dragons clash

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நத்தத்தில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
சென்னை,

4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 19-ந்தேதி நத்தத்தில் (திண்டுக்கல்) தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். தினசரி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். 2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நாட்களில் முதல் ஆட்டம் பிற்பகல் 3.15 மணிக்கு ஆரம்பமாகும்.


இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி நத்தத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 20-ந் தேதி முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்சை சந்திக்கிறது.

இந்த போட்டியில் நத்தம், நெல்லையில் தலா 15 ஆட்டங்களும், சென்னையில் இறுதிப்போட்டி உள்பட 2 ஆட்டங்களும் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆகஸ்டு 18-ந் தேதி நடைபெறுகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் திருச்சி (ஜூலை 23-ந்தேதி), காரைக்குடி (ஜூலை 27-ந்தேதி), மதுரை (ஜூலை 31-ந்தேதி), கோவை (ஆகஸ்டு 4-ந்தேதி), காஞ்சி (ஆகஸ்டு 8-ந்தேதி) தூத்துக்குடி (ஆகஸ்டு 11-ந் தேதி) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.