கிரிக்கெட்

இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் + "||" + Will India pull out England? - Sensational clash today

இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல்

இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை வெளியேற்றும் முனைப்புடன் இன்று அந்த அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 38-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பின் விளிம்புக்கு வந்து விட்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியா சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும்.


முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 143 ரன்னில் சுருட்டிய இந்திய அணி அதே வேகத்துடன் இங்கிலாந்தையும் போட்டுத்தாக்க ஆயத்தமாகி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா (338 ரன்), கேப்டன் விராட் கோலி (4 அரைசதத்துடன் 316 ரன்), லோகேஷ் ராகுல் (172 ரன்) உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். டோனியின் பேட்டிங் மந்தமாக இருக்கிறது என்று அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும் வெற்றி பெறும் போது அது காணாமல்போய் விடும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும் (9 விக்கெட்), முகமது ஷமியும் (8 விக்கெட்) கலக்குகிறார்கள். இதில் முகமது ஷமி ஓவருக்கு சராசரியாக வெறும் 3.46 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சில் கொஞ்சம் பலவீனமானவர்கள் என்பதால் நமது சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று கம்பீரமாக பயணித்தார்கள். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து ‘சரண்’ அடைந்ததால் இங்கிலாந்தின் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும்.

எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியுடன் களம் இறங்குவார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக காணப்படும் இங்கிலாந்து அணி ஏனோ கடந்த இரு ஆட்டங்களில் ஆக்ரோஷமின்றி பணிந்து போய் விட்டது. இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் நிச்சயம் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள். காயத்தால் சில ஆட்டங்களில் ஆட முடியாமல் போன ஜாசன் ராய் களம் திரும்ப வாய்ப்புள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் (2 சதம், 3 அரைசதம் உள்பட 432 ரன்), பென் ஸ்டோக்ஸ் (3 அரைசதத்துடன் 291 ரன்) கேப்டன் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ என்று அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. இவர்களின் ஆட்டம் ஒரு சேர ‘கிளிக்’ ஆனால் இந்தியாவுக்கு ஆபத்து தான். இதே போல் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (16 விக்கெட்), மார்க் வுட் (13 விக்கெட்) மிரட்டக்கூடியவர்கள். இந்த உலக கோப்பையில் 397 ரன், 386 ரன்கள் என்றெல்லாம் இங்கிலாந்து ரன் குவித்து மலைக்க வைத்தாலும் நெருக்கடியை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்று சில உள்ளூர் விமர்சகர்கள் விரும்புவதில்லை. அவர்கள் இங்கிலாந்தின் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்’ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் ஆகியோர் மீது தொடுத்த மறைமுக தாக்குதல் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பலம் பொருந்திய இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் சூடுபறக்கும். இந்திய அணி வழக்கமாக நீலநிற சீருடையில் ஆடும். ஆனால் இரு அணிகளின் சீருடையும் ஒரே நிறம் என்பதால் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறைப்படி இந்தியாவின் சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்திய வீரர்கள் ஆரஞ்சு, நீலம் நிறம் கலந்த புதுமையான சீருடையில் இன்றைய போட்டியில் ஜொலிக்கப்போகிறார்கள். உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடந்தாலும் இந்திய அணி விளையாடும் போது ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்றைய ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. 55 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகளை இந்திய ஆதரவாளர்களே வாங்கி இருப்பதால் உள்ளூர் அணியை விட இந்தியாவுக்கு ரசிகர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் அல்லது ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ராஆர்ச்சர் அல்லதுபிளங்கெட்,மார்க் வுட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘விஜய் சங்கர் அசத்துவார்’- கோலி நம்பிக்கை

தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் 28 வயதான விஜய் சங்கர் இந்த உலக கோப்பையில் இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்னோடு 2 விக்கெட் எடுத்த விஜய் சங்கர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 29 ரன்னும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். விஜய் சங்கர் அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டார் என்றும், அவருக்கு பதிலாக இளம் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்டை சேர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் விஜய் சங்கருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி ஆதரவுகரம் நீட்டியுள்ளார். விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விஜய் சங்கர், உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி ஓரளவு நன்றாக ஆடினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் கடினமாக இருந்தது கண்கூடாக தெரிந்தது. இந்த ஆட்டத்தில் ஷாட்டை தேர்வு செய்து ஆடுவதில் தான் எல்லாமே இருந்தது. அவரிடமும் நாங்கள் அது குறித்து விவாதித்தோம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் நன்றாக ஆடுவது போல் தான் தோன்றியது. ஆனால் கெமார் ரோச், அற்புதமான ஒரு பந்து வீசி அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டார். அதனால் அவரது ஆட்டம் குறித்து விவாதிக்க வேண்டிய தேவையில்லை. என்னை பொறுத்தவரை அவர் நன்றாகவே ஆடியிருக்கிறார். கிரிக்கெட்டில் 30 முதல் 60 ரன்கள் வரை எடுப்பதற்கு சில சமயம் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அப்படி இருந்தால் தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர் பெரிய இன்னிங்சை ஆடும் வகையில் நெருங்கி வந்து விட்டார். நிச்சயம் அது போன்ற ஆட்டத்தை அவர் அணிக்காக வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.

‘இந்திய அணியை வீழ்த்துவோம்’ - மோர்கன்

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போதைய இந்திய அணியை மிகவும் கடினமான அணி என்று சொல்லமாட்டேன். எனது கேப்டன்ஷிப்பில் இதை மிகப்பெரிய ஆட்டமாக கருதவில்லை. இதே இந்திய அணியை கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வந்த போது ஒரு நாள் தொடரில் (2-1) தோற்கடித்தோம். அதே போல் இந்த முறையும் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். ஜாசன் ராய் இந்த ஆட்டத்தில் ஆடுவதற்கு தயாராகி வருகிறார். தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் போட்டிக்குள் உடல்தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவரது விஷயத்தில் ரிஸ்க் எடுக்கமாட்டோம். இந்த ஆட்டத்திற்கு இந்திய ரசிகர்கள் அதிக அளவில் வருகை தந்து, ஆரவாரம் செய்வார்கள் என்பது தெரியும். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராவோம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
2. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 204 ரன்கள் இலக்கை இந்திய அணி 19-வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது.
4. மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசுகிறது-ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
மீன் தண்ணீருக்கு செல்வதைப்போல மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசிவருகிறது என ஐ.நா.வின் இந்திய நிரந்தர துணை தூதர் நாகராஜ் நாயுடு கூறி உள்ளார்.
5. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.