கிரிக்கெட்

அரைஇறுதியை எட்டுவது யார்? இங்கிலாந்து-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை + "||" + Who will reach the semi-finals? England-New Zealand Today Clash

அரைஇறுதியை எட்டுவது யார்? இங்கிலாந்து-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

அரைஇறுதியை எட்டுவது யார்? இங்கிலாந்து-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் தீவிரத்துடன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
செஸ்டர்-லீ-ஸ்டிரிட்,

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் செஸ்டர்-லீ-ஸ்ரிட்டில் இன்று நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மல்லுகட்டுகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இது தான் கடைசி லீக் ஆட்டமாகும்.


போட்டியை நடத்தும் இங்கிலாந்து இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்து புள்ளிபட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் சற்று தடுமாற்றத்திற்குள்ளான இங்கிலாந்து அணி, முந்தைய இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 337 ரன்கள் குவித்து மீண்டும் எழுச்சி பெற்று விட்டது. அந்த ஆட்டத்தில் பேர்ஸ்டோ (111 ரன்), பென் ஸ்டோக்ஸ் (79 ரன்) ஆகியோரின் அதிரடி ஜாலத்தால் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். அதே போன்று மீண்டும் ரன்வேட்டை நடத்த இங்கிலாந்து வீரர்கள் வரிந்துகட்டி நிற்பார்கள்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதியை எட்டி விடும். வீழ்ந்தால் பாகிஸ்தான்-வங்காளதேசம் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.

8 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும் இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், அரைஇறுதியை உறுதி செய்யும். தோற்றால், பாகிஸ்தான் அணிக்குரிய கடைசி லீக்கின் முடிவை பொறுத்து நியூசிலாந்தின் வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

தொடக்கத்தில் ‘வீறுநடை’ போட்டு வந்த நியூசிலாந்து கடைசி இரு ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 244 ரன்கள் இலக்கை கூட விரட்டிப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது. பந்து வீச்சில் அசத்தும் நியூசிலாந்துக்கு பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் (2 சதம் உள்பட 454 ரன்), ராஸ் டெய்லர் (233 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் சீராக இல்லை. இது தான் அவர்களின் பலவீனமாக உள்ளது. பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு இம்சை கொடுக்க வேண்டும் என்றால் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

மொத்தத்தில் இரு அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோதலாக அமைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். 1983-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் தோற்றதில்லை. அந்த 36 ஆண்டு கால பெருமையை நியூசிலாந்து தக்க வைக்குமா? என்ற ஆவலும் ஏற்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட், மேட்ஹென்றி அல்லது டிம் சவுதி.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.