டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வீரர்கள் தேர்வு


டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 5 July 2019 12:12 AM GMT (Updated: 5 July 2019 12:12 AM GMT)

விரைவில் தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆதித்தனார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வீரர்கள் இருவர் தேர்வாகி உள்ளனர்.

சென்னை,

வருகிற 19-ந்தேதி தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு புதிதாக தேர்வாகி உள்ள 5 பேரில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெபசெல்வின், ஆல்-ரவுண்டர் சந்தானசேகர் ஆகியோரும் அடங்குவர்.

ஜெபசெல்வினின் சொந்த ஊர் நாசரேத் ஆகும். இவரது தந்தை ஏசாதனசிங் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். தாயார் பெயர் பாக்கியமணி.

23 வயதான ஜெபசெல்வின் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் எம்.ஏ. (ஆங்கிலம்) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஜெபசெல்வின் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், டிவிசன் லீக்கிலும் விளையாடி வருகிறார். அவர் கூறுகையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி என்னை போன்ற இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கிரிக்கெட்டில் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி செல்ல உதவிகரமாக இருக்கிறது.

அணித் தேர்வுக்கு முன்பாக என்னை பயிற்சிக்கு வரவழைத்து விதவிதமாக பந்து வீச சொன்னார்கள். நானும் அவர்கள் சொன்னது போல் செயல்பட்டு இப்போது தேர்வாகி இருக்கிறேன். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக பங்கேற்க இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த அணியில் அங்கம் வகிக்கும் விஜய் சங்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதே போல் பயிற்சியாளர் ஹேமங் பதானி சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர். இவர்களுடன் சேர்ந்து விளையாட இருப்பது கனவு போல் உள்ளது.

பிரபல வீரர்களுடன் இணைந்து ஆடும் போது கிரிக்கெட்டில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். முதலாவது ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.

மற்றொரு வீரர் சந்தானசேகரின் சொந்த ஊர் மைக்கண் நாடார் குடியிருப்பு. இவர் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது தந்தை வேல்பாண்டியன். தாயார் சரோஜா. சகோதரர் சாமுண்டீஸ்வரன் கனடாவில், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கிறார்.

சந்தானசேகர் அதிரடி பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசக்கூடியவர். தூத்துக்குடி மாவட்ட அணிக்காக 9 ஆண்டுகளாக ஆடுகிறார். இது தவிர டிவிசன் லீக் போட்டிகளிலும் அசத்தி வருகிறார்.

அவர் கூறுகையில், ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கீழ்மட்ட அளவில் திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்கு நல்ல அடித்தளம் ஆகும். நான் உடற்கல்வியியல் துறையில் இருப்பதால் மற்ற லெவல் கிரிக்கெட் போட்டிகளில் எந்த மாதிரி பயிற்சிகொடுக்கிறார்கள் என்பதை அறிய எப்போதும் ஆசை உண்டு. அதற்கு இதை ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.’ என்றார்.

Next Story