உலக கோப்பை கிரிக்கெட் : 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதும் கேப்டன்கள்


உலக கோப்பை கிரிக்கெட் : 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதும் கேப்டன்கள்
x
தினத்தந்தி 7 July 2019 2:57 PM GMT (Updated: 7 July 2019 2:57 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் 11 ஆண்டுகளுக்கு பின் இரு அணி கேப்டன்கள் மீண்டும் மோதுகின்றனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாய்க்கிழமை அன்று மான்செஸ்டரில் மோதவுள்ளது.  அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள்  வியாழக்கிழமை அன்று மோதவுள்ளது.  

முதல் அரையிறுதியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி ஆனது 11 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போட்டியினை நினைவுபடுத்துகின்றது. 

11 ஆண்டுகளுக்கு முன் 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில் இதே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சனும் இருந்தனர்.

தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு, அதே கேப்டன்கள் தலைமையில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப்போட்டியில் மோதவுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது. 

தற்போது நடைபெறவிருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

2008 -ம் ஆண்டு நடந்த போட்டியில், இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜடேஜாவும், அதேபோல் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story