இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் கேப்டன் விராட்கோலி நம்பிக்கை


இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் கேப்டன் விராட்கோலி நம்பிக்கை
x
தினத்தந்தி 7 July 2019 11:30 PM GMT (Updated: 7 July 2019 7:41 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் விராட்கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

லீட்ஸ், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லீட்சில் நேற்று முன்தினம் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் கருணாரத்னே விக்கெட்டை வீழ்த்திய போது ஒரு நாள் போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 57 ஒருநாள் போட்டியில் ஆடி 102 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 111 ரன்னும், ரோகித் சர்மா 103 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த உலக கோப்பை போட்டி தொடரில் ரோகித் சர்மா அடித்த 5-வது சதம் இதுவாகும். இதன் மூலம் உலக கோப்பை போட்டி தொடர் ஒன்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பையில் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்பினோம். ஆனால் இந்த அளவுக்கு அதிகமான வெற்றியுடன் (7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) அரைஇறுதிக்கு முன்னேறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்திய அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இந்திய அணியில் அங்கம் வகிப்பதை பெருமையாக கருதுகிறேன். அணியில் வீரர்கள் கலவை நன்றாக உள்ளது. பேட்டிங், பந்து வீச்சு என்று எல்லா துறையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அரைஇறுதியில் எந்த அணியை எதிர்கொள்கிறோம் என்பது பெரிய விஷயமல்ல. அடுத்த அணியின் ஆட்டம் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவது கிடையாது. நாங்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் எந்த அணியும் எங்களை வீழ்த்தும். நாங்கள் நன்றாக ஆடினால் எந்த அணியையும் தோற்கடிப்போம். அரைஇறுதியில் அணியாக எங்களது திறமையையும், பலத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நன்றாக ஆடினால் முடிவு தானாக சாதகமாக வரும். ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் முதலில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் தற்போது நல்ல நிலைக்கு திரும்பி விட்டார். பேட்டிங்கிலும் அவர் வித்தியாசமாக விளையாட முயற்சிக்கிறார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவது அணிக்கு நல்ல விஷயமாகும். எஞ்சிய 2 ஆட்டங் களிலும் நமது அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘ஒரு உலக கோப்பை போட்டியில் 5 சதங்கள் அடித்து சாதனை படைப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. பேட்டிங் செய்ய செல்லுகையில் சாதனைகளை பற்றி நினைப்பது கிடையாது. நிலைத்து நின்று அணி நல்ல நிலையை எட்ட வைப்பதே எனது பணியாகும். நான் நன்றாக விளையாடினால் எல்லாம் தானாகவே வந்து சேரும் என்பது எனக்கு தெரியும். எனது பணி அணி வெற்றி எல்லையை எட்ட வைப்பதாகும். போட்டியில் ஷாட் தேர்வு செய்து ஆடுவது மிகவும் முக்கியமானதாகும். ஆடுகளத்தின் தன்மை மற்றும் பந்து வீசும் பவுலரின் செயல்பாடு ஆகியவற்றை கணித்து அதற்கு தகுந்தபடி எனது ஆட்ட யுக்தியை அமைப்பேன். அதற்கு இதுவரை நல்ல பலன் கிடைத்து வருகிறது. பேட்டிங்கின் அடிப்படை அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும். எனது அனுபவத்தின் மூலம் ஆட்ட அணுகுமுறையை கற்று இருக்கிறேன். நடந்தது நடந்தது தான். கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதிய நாளாகும். எல்லா நாட்களையும் புத்துணர்ச்சியுடன் தொடங்க விரும்புகிறேன். எந்தவொரு ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. எந்தவொரு சதமும் அடிக்கவில்லை என்ற மனநிலையுடன் தான் களம் இறங்குவேன். சதங்கள் அடிப்பது என்பது வீரர்களுக்கு சவாலாகும். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சிறந்த மேட்ச் வின்னர். அவர் ஓய்வு பெறுவது ஏமாற்றம் அளிக்கிறது. அரைஇறுதியில் யாரை சந்திப்போம் என்பது நினைப்பதை விடுத்து இந்த சிறப்பான வெற்றியை கொண்டாட விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

Next Story