இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்


இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்
x
தினத்தந்தி 7 July 2019 10:00 PM GMT (Updated: 7 July 2019 8:08 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்துள்ளது.

லீட்ஸ்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் லீட்சில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியின் போது மைதானத்துக்கு மேலே 2 முறை பறந்த குட்டி விமானத்தில் ‘காஷ்மீருக்கு நீதி வேண்டும்’. ‘காஷ்மீருக்கு நீதி வேண்டும், இனப்படுகொலையை நிறுத்து’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பேனர் இடம் பெற்று இருந்தது. இந்த உலக கோப்பை போட்டியில் இதுபோன்ற சர்ச்சை நடைபெறுவது 2-வது முறையாகும். கடந்த ஜூன் 29-ந் தேதி நடந்த பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனருடன் குட்டி விமானம் பறந்தது. இந்தியாவுக்கு எதிரான வாசகம் கொண்ட பேனர் பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இதுபோன்ற சம்பவத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றிய எங்களது கவலையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்து இருக்கிறோம். இதுபோன்ற சம்பவம் அரைஇறுதியிலும் தொடர்ந்தால் உண்மையிலேயே துரதிர்ஷ்டமாக அமையும். எங்கள் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது’ என்றார்.

இது குறித்து ஐ.சி.சி. விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘விமானத்தின் மூலம் அரசியல் குறித்த பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலக கோப்பை போட்டியில் எந்த அரசியல் கோஷங்களையும் ஆதரிப்பதில்லை. இந்த தொடரில் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதற்கு முன்பு நடந்த சம்பவத்தின் போது மேற்கு யார்க்ஷையர் போலீசார் இனிமேல் இப்படி நடக்காது என்று உறுதி அளித்து இருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்து இருப்பது அதிருப்தியை அளிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story