தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக டிராவிட்டுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது


தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக டிராவிட்டுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது
x
தினத்தந்தி 9 July 2019 10:00 PM GMT (Updated: 9 July 2019 8:13 PM GMT)

இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

புதுடெல்லி, 

இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. அவர் கடந்த 1–ந் தேதி இந்த பதவியை ஏற்பதாக இருந்தது. ஆனால் டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகிப்பதால் இரட்டை ஆதாய பிரச்சினை எழுந்தது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள பதவியில் இருந்து விலகுமாறு டிராவிட்டை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவுறுத்தியது. இதனால் அவர் தனது புதிய பதவியை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் டிராவிட்டை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பதவியில் இருந்து அந்த நிறுவனம் விடுவித்து இருக்கிறது. இதனால் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ஏற்பதில் நிலவிய சிக்கல் தீர்ந்தது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இனிமேல் டிராவிட் மேற்பார்வையிடுவார். பயிற்சி, பயிற்சியாளர்கள், வீரர்களை ஊக்குவித்தல் பணிகளையும் அவர் கவனிப்பார். தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்களுடன் இணைந்து அணியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவார். குறிப்பாக இந்தியா ‘ஏ’, 19 மற்றும் 23 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சி திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளையும் அவர் கவனிப்பார். இந்திய அணியின் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவிட்டின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள் என்பது குறிப்பிடப்படவில்லை.


Next Story