கிரிக்கெட்

2–வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இன்று மோதல் + "||" + 2nd semi final Australia - England clash today

2–வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இன்று மோதல்

2–வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்

பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2–வது அரைஇறுதி

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2–வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலிய அணி இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் சேசிங் செய்கையில் தோல்வியை சந்தித்தது. மற்ற எல்லா அணிகளையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

வார்னர்–பிஞ்ச்

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எழுச்சி கண்டுள்ளது. பேட்டிங்கில் டேவிட் வார்னர் (3 சதம், 3 அரைசதம் உள்பட 638 ரன்கள்), ஆரோன் பிஞ்ச் (2 சதம், 3 அரைசதம் உள்பட 507 ரன்கள்), அலெக்ஸ் கேரி (3 அரைசதத்துடன் 329 ரன்கள்), ஸ்டீவன் சுமித் (3 அரைசதத்துடன் 294 ரன்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் கலக்குகிறார். அவர் இதுவரை 26 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் சாய்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு கம்மின்ஸ் (13 விக்கெட்), பெரேன்டோர்ப் (9 விக்கெட்) பக்கபலமாக இருக்கிறார்கள். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத மார்கஸ் ஸ்டோனிஸ் உடல் தகுதி பெற்று விட்டதால் இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்றும், காயம் அடைந்த ஷான் மார்ஷ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஹேன்ட்ஸ்கோம்ப் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்றும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து எப்படி?

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் எடுத்து 3–வது இடம் பிடித்தது. பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து மற்ற 6 அணிகளையும் சாய்த்தது. பேட்டிங்கில் ஜோரூட் (2 சதம், 3 அரைசதம் உள்பட 500 ரன்கள்), பேர்ஸ்டோ (2 சதம், 2 அரைசதம் உள்பட 462 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (4 அரைசதத்துடன் 381 ரன்கள்), ஜாசன் ராய் (1 சதம், 3 அரைசதம் உள்பட 341 ரன்கள்), மோர்கன் (1 சதத்துடன் 317 ரன்கள்), ஜோஸ் பட்லர் (1 சதத்துடன் 253 ரன்கள்) உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (17 விக்கெட்), மார்க்வுட் (16 விக்கெட்), கிறிஸ்வோக்ஸ் (10 விக்கெட்) பிளங்கெட் (8 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறார்கள். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் கூறுகையில் ‘ஆஸ்திரேலிய அணி முந்தைய காலக்கட்டத்தில் எங்களை வீழ்த்தி இருக்கிறது. ஆனால் தற்போதைய இங்கிலாந்து அணி வித்தியாசமானது. எங்களுடைய நாளில் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்துவோம்’ என்றார்.

1992–ம் ஆண்டுக்கு பிறகு...

பயிற்சி மற்றும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் ஆஸ்திரேலிய அணி 8–வது முறையாக இறுதிசுற்றை அடைவதற்கு எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்கும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பழிதீர்த்து 4–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். இங்கிலாந்து கடைசியாக 1992–ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.

கிரிக்கெட்டில் இந்தியா–பாகிஸ்தான் போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பரம எதிரிகள் ஆகும். வலுவான அணிகள் மல்லுகட்டுவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய அணி 1992–ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வானிலை எப்படி?

பர்மிங்காமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

ஆஸ்திரேலியா: வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஹேன்ட்ஸ்கோம்ப், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பெரேன்டோர்ப், நாதன் லயன்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், ஜோஸ்பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட்.

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து

3 தரவரிசை 1

இதுவரை நேருக்கு நேர்: 148, 2 டை, 3 முடிவில்லை

82 வெற்றி 61 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர்: 8

வெற்றி 6 வெற்றி 2