ஆஸ்திரேலிய அணியை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து


ஆஸ்திரேலிய அணியை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
x
தினத்தந்தி 11 July 2019 11:00 PM GMT (Updated: 11 July 2019 7:47 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பர்மிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மோசமான தொடக்கம்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துடன் மல்லுகட்டியது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தயக்கமின்றி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரன்வேட்டை நடத்தி வந்த இந்த ஜோடி முக்கியமான இந்த ஆட்டத்தில் சோபிக்க தவறியது. கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் புயல்வேகத்தில் இருவரின் தலையும் உருண்டன. ஆரோன் பிஞ்ச் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். கிறிஸ் வோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் வார்னர் (9 ரன்) ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார். அடுத்து வந்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது ஆஸ்திரேலிய அணி 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (6.1 ஓவர்) இழந்து பரிதவித்தது. முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி சீக்கிரம் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியதை ஆஸ்திரேலியாவின் பேட்டிங் நினைவூட்டியது.

காப்பாற்றிய சுமித்

இதன் பின்னர் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் இணைந்து அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றினர். படிப்படியாக ரன்ரேட்டையும் 4 ரன்களுக்கு மேலாக கொண்டு சென்றனர். 24.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது.

அணியின் ஸ்கோர் 117 ரன்களாக உயர்ந்த போது அலெக்ஸ் கேரி (46 ரன், 70 பந்து, 4 பவுண்டரி) அடில் ரஷித் வீசிய சுழற்பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிசின் (0) விக்கெட்டையும் அதே ஓவரில் ரஷித் கபளகரம் செய்தார். இதனால் ஆஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றத்திற்கு உள்ளானது.

ஸ்டீவன் சுமித் தொடர்ந்து போராடினாலும் இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ‘அதிரடி மன்னன்’ மேக்ஸ்வெல் 22 ரன்களில் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். சதத்தை நோக்கி பயணித்த ஸ்டீவன் சுமித் (85 ரன், 119 பந்து, 6 பவுண்டரி) 48-வது ஓவரில் ஜோஸ் பட்லரால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியா 223 ரன்

முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ரன்களுக்கு முடங்கியது. நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆவது இது 5-வது முறையாகும். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து 224 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராயும், பேர்ஸ்டோவும் களம் புகுந்தனர். முதல் 5 ஓவர்கள் எச்சரிக்கையுடன் நிதானத்தை கடைபிடித்த இவர்கள் அதன் பிறகு ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டினர். குறிப்பாக ஜாசன் ராய், மிட்செல் ஸ்டார்க்கின் ஓவரில் சிக்சரை பறக்க விட்டு அதிரடியை ஆரம்பித்து வைத்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளிய ஜாசன் ராயை கட்டுப்படுத்த வழிதெரியாமல் ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் திகைத்து போனார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவன் சுமித்தை பயன்படுத்தி பார்த்தார். அவரது ஓவரில் ஜாசன் ராய் ஹாட்ரிக் சிக்சர் விரட்டி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடி ஸ்கோர் 124 ரன்களை (17.2 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. பேர்ஸ்டோ 34 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி) மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

ஜாசன் ராய்க்கு தவறான அவுட்

ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஜாசன் ராய் நடுவரின் தவறான தீர்ப்புக்கு இரையானார். ஜாசன் ராய் (85 ரன், 65 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) கம்மின்ஸ் லெக்சைடில் வீசிய எழும்பி சென்ற பந்தை அடிக்க முயற்சித்தார். அது பேட்டில் படவில்லை. ஆனால் அதை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி முறையிட்டதும் நடுவர் தர்மசேனா விரலை உயர்த்தி விட்டார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஜாசன் ராய், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவரிடம் வாதிட்டார். ஆனாலும் அவர்களது டி.ஆர்.எஸ். வாய்ப்பு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி அதிருப்தியுடன் நடையை கட்டினார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட் அல்லது கையுறை எதிலும் உரசவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து

அடுத்து வந்த ஜோ ரூட்டும், கேப்டன் இயான் மோர்கனும் இங்கிலாந்து அணியை சிக்கலின்றி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய பவுலர்களால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. ஜோ ரூட் 49 ரன்களுடனும் (46 பந்து, 8 பவுண்டரி), மோர்கன் 45 ரன்களுடனும் (39 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர். கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 1979, 1987, 1992-ம் ஆண்டுகளிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.

லண்டன் லார்ட்சில் வருகிற 14-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

Next Story