கிரிக்கெட்

உலக கோப்பையில் ‘பிளே–ஆப்’ சுற்று கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் விராட்கோலி சொல்கிறார் + "||" + At the World Cup To bring a flea-app-digital circuit

உலக கோப்பையில் ‘பிளே–ஆப்’ சுற்று கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் விராட்கோலி சொல்கிறார்

உலக கோப்பையில் ‘பிளே–ஆப்’ சுற்று கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் விராட்கோலி சொல்கிறார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐ.பி.எல். பாணியில் பிளே–ஆப் சுற்று அட்டவணை முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

மான்செஸ்டர், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐ.பி.எல். பாணியில் பிளே–ஆப் சுற்று அட்டவணை முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

விராட்கோலி கருத்து

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடர்ந்து நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இந்திய அணியின் இந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் கவலை அடைய வைத்துள்ளது.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த அணி ஒரு தோல்வியால் வெளியேறும் இந்த முறையை மாற்றி ஐ.பி.எல். பாணியில் பிளே–ஆப் சுற்று முறை வருங்காலத்தில் கொண்டுவரப்படுமா? என்று கேட்கிறீர்கள். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்ததற்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்க வேண்டும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் இந்த வி‌ஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். உண்மையிலேயே இது மதிப்பளிக்கக்கூடிய அம்சம் தான். ஆனால் இது எப்பொழுது அமல்படுத்தப்படும் என்பது தெரியாது. அரை இறுதி சுற்றுமுறை என்பது சவாலும் வித்தியாசமான உற்சாகமும் நிறைந்ததாகும். இதில் மிகவும் துல்லியமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட வேண்டும். முந்தைய போட்டிகளில் நீங்கள் எப்படி ஆடினீர்கள் என்பது முக்கியமல்ல. இது புதிய நாள், புதிய போட்டி. திறமைக்கு ஏற்ப ஆடாவிட்டால் மூட்டை கட்ட வேண்டியது தான். எனவே இந்த முடிவை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஒரு சிலரையே நம்பி இருக்கக்கூடாது

ஐ.பி.எல். போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி பிளே–ஆப் சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அந்த அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘இது பெரிய ஸ்கோர் அல்ல. நமது அணி நிச்சயம் இலக்கை எட்டுப்பிடித்து விடும் என்று நம்பினேன். இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்திய அணி கடைசி வரை வெற்றிக்காக போராடிய விதம் பாராட்டுக்குரியது. 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி நியூசிலாந்து அணி கண்ட தொடக்கம் அற்புதமாக இருந்தது. எல்லா நேரங்களிலும் ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அளிப்பார் என்றோ? விராட்கோலி நல்ல அடித்தளம் அமைத்து கொடுப்பார் என்றோ? நாம் நம்பி கொண்டு இருக்கக்கூடாது. அணியில் உள்ள மற்ற வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். டோனி நமக்கு பல ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார். அதற்காக எல்லா தருணங்களிலும் டோனி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்து வீசினார்கள். கேப்டன் கேன் வில்லியம்சனின் ஆட்ட அணுகுமுறை சிறப்பானதாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.