இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்


இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 7:58 PM GMT)

2015–ம் ஆண்டில் லீக் சுற்றிலேயே சொதப்பிய பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

பர்மிங்காம், 

2015–ம் ஆண்டில் லீக் சுற்றிலேயே சொதப்பிய பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

மோர்கன் பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 32.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாசன் ராய் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்களும், ஜோ ரூட் 49 ரன்களும், கேப்டன் மோர்கன் 45 ரன்களும் விளாசினர். பர்மிங்காமில் 2001–ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எந்த வடிவிலான போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.

27 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிசுற்றை எட்டியதால் இங்கிலாந்து வீரர்கள் பரவசத்தில் உள்ளனர்.

பின்னர் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் ‘இன்றைய நாளில் எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. முழு அர்ப்பணிப்போடு விளையாடி வெற்றியை வசப்படுத்தி இருக்கிறோம். இது போன்று சாதிக்கும் போதும், சரியாக ஆடாத போதும் கூட ஒரு அணியாக நாங்கள் உற்சாகமாக அனுபவித்து கற்றுக்கொள்கிறோம். 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய போது அடுத்த உலக கோப்பையில் நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அந்த சமயம் 2019–ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து இறுதிசுற்றுக்கு வரும் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்லியிருந்தால் நான் உங்களை பார்த்து சிரித்து இருப்பேன். ஆனாலும் அதன் பிறகு வியக்கத்தகு முன்னேற்றம் கண்டு இந்த நிலையை எட்டியிருக்கிறோம்.

சவாலுக்கு தயார்

ஞாயிற்றுக்கிழமை நெருக்கடியை கண்டு பயந்து ஓடும் நாள் அல்ல. அது சாதிக்க வேண்டிய நாள். இங்கிலாந்து வீரர்கள் தங்களது வழக்கமான பாணியில் விளையாடி முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அது தான் முக்கியம்.

நியூசிலாந்து இந்த தொடர் முழுவதும் அனேகமாக தோற்கடிக்க கடினமான ஒரு அணியாக இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக ஆடினார்கள். இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. ஆனால் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.

பிஞ்ச் கருத்து

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘கடந்த 12 மாதங்களில் அணியாக நாங்கள் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளோம். அதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். வெற்றி பெறுவதற்காகவே இங்கு வந்தோம். கடைசியில் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த உலக கோப்பையில் அரைஇறுதியில் தான் எங்களது மோசமான செயல்பாடு வெளிப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி எங்களை எல்லா வகையிலும் வீழ்த்தி விட்டது. குறிப்பாக முதல் 10 ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை (3 விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது) மாற்றி விட்டது’ என்றார்.


Next Story