டோனியை பின்வரிசையில் இறக்கியது ஏன்? பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம்


டோனியை பின்வரிசையில் இறக்கியது ஏன்? பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம்
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 8:10 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் டோனியை முன்கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

லண்டன், 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் டோனியை முன்கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். டோனியே முன்கூட்டியே இறக்கி ஆட்டம் இழந்திருந்தால் அத்துடன் இலக்கை விரட்டும் முயற்சி செத்து போயிருக்கும். டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறப்பு மிக்கவர். அவரது அனுபவம் பின்வரிசையில் தேவை என்பதாலேயே 7–வது வரிசையில் அவரை இறக்கினோம். இந்த வகையில் அவரை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் குற்றமாகியிருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

பேட்டிங்கில் 4–வது வரிசையில் நிலையான ஒரு ஆட்டக்காரர் தேவையாக இருந்தார். அது தான் எங்களுக்கு பிரச்சினையாகவும் இருந்தது. ஷிகர் தவான் காயமடைந்து வெளியேறியதால் லோகேஷ் ராகுல் தொடக்க வரிசைக்கு வந்தார். அதன் பிறகு விஜய் சங்கரும் காயத்தால் விலக நேரிட்டதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரைஇறுதிக்கு முன்பாக மேலும் ஒரு ஆட்டம் இருந்திருந்தால் மயங்க் அகர்வாலை தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து, லோகேஷ் ராகுலை மிடில் வரிசைக்கு அனுப்பி சோதித்து பார்த்து இருப்போம்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.


Next Story