‘நடுவர் பணியும் கடினம்தான் பாஸ்’ பி.சி.சி.ஐ. நடுவர் சதாஷிவ் ஐயர்


‘நடுவர் பணியும் கடினம்தான் பாஸ்’ பி.சி.சி.ஐ. நடுவர் சதாஷிவ் ஐயர்
x
தினத்தந்தி 13 July 2019 12:55 PM GMT (Updated: 13 July 2019 12:55 PM GMT)

சமீபத்திய கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவர்கள் வழங்கிய தீர்ப்புகளும், டி.வி. நடுவரின் முடிவுகளும், பல சர்ச்சைகளை உருவாக்கின. ‘நோ பால்’ வழங்கியதில் சர்ச்சை, அகலப்பந்து (வைட்) கொடுத்ததில் சர்ச்சை, ‘எல்.பி.டபிள்யூ’ முறையில் ‘அவுட்’ வழங்கப்பட்டதில் சர்ச்சை என கள நடுவர்களையும், டி.வி.நடுவரையும் குறிவைத்து, ரசிகர்கள் ‘வார்த்தை பந்துகளை’ வேகமாக வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

மைதானம் முழுக்க கேமரா கண்கள் சுழன்றும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், நடுவர்களால் சரியான முடிவுகளை வழங்கமுடியவில்லை என்பதுதான், ரசிகர்களின் சாடலாக இருக்கிறது.

ஆனால் ‘‘எத்தகைய தொழில்நுட்பங்கள் வந்தாலும், நடுவரின் முடிவுகளில் சில தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்று’’ என்கிறார், சதாஷிவ் ஐயர்.

தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவர், கடந்த 10 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக களம் கண்டவர். மேலும் பி.சி.சி.ஐ.அமைப்பின் ‘டாப்’ நடுவர்களில் ஒருவரா கவும் இருக்கிறார். அதனால்தான், ஐ.பி.எல்.போட்டிகள், ரஞ்சி கோப்பை போட்டிகளில் கள நடுவராக இவரை பார்க்க முடிகிறது. ‘நடுவர்’ பணி பற்றிய பல சந்தேகங்களுடன் அவரை சந்திக்க, பல விஷயங்களை ‘டி.ஆர்.எஸ்.’ முறையில் விளக்கி கூறினார். அதில் சிலவற்றை ‘ஹைலைட்ஸ்’ முறையில் தொகுத்திருக்கிறோம். இதோ...

கிரிக்கெட் நடுவரின் பணிகள் என்ன?, அதில் இருக்கும் சிரமங்கள் என்ன?

நடுவர் பணியே சிரமமான பணிதான். கிரிக்கெட் விளையாட்டில், வீரர்களுக்கும், ரசிகர் களுக்கும், நடுவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதல் பாதியில் விளையாடும் அணியினர், இரண்டாம் பாதியில் ஓய்வெடுக்க வாய்ப்பிருக்கிறது. ரசிகர்களுக்கும் நிறையவே ஓய்வு கிடைக்கும். ஆனால் நடுவர்களுக்கு மட்டும்தான், ஆட்டத்தின் முதல் பந்தில் தொடங்கி, கடைசி பந்து வரை ஓய்வில்லாத வேலை இருக்கிறது.

உதாரணத்திற்கு ஆட்டத்தின் முதல் பந்தையே எடுத்துக்கொள்வோம். ஆப் சைட், லெக் சைட் பகுதிகளில் எத்தனை வீரர்கள் பீல்டிங்கிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை கணக்கிட்டு, பந்துவீசும் போது பவுலர் எல்லை கோட்டை தாண்டுகிறாரா, அகல பந்தாக செல்கிறதா, ‘பிட்சிங் இன்-லைனில்’ குத்தி, பந்து எல்.பி.டபிள்யூ விக்கெட்டை ஏற்படுத்து கிறதா, அந்த பந்தை பேட்ஸ்மேன் அடித்திருந்தால், ரன் எடுக்க வரும்போது எல்லைக்கோட்டிற்குள் வந்து செல்கிறாரா, ரன் ஓடுகையில் ரன் அவுட்டிற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். இவற்றில் எது நடந்திருந்தாலும், அடுத்த நொடியே தீர்ப்பு வழங்கவேண்டும். ஒரு பந்திற்கே இவ்வளவு மெனக்கெடவேண்டும் என்றால், ஒருநாள் போட்டிகளின்போது மொத்தம் 600 பந்துகள் வீசப்படும்போது, நடுவரின் தீர்ப்புகளில் ஒருசில தவறுகள் ஏற்படுவதில், தவறில்லையே.

கள நடுவர்களுக்கு உதவிட டி.வி.நடுவர் இருக்கிறாரே. அப்படி இருந்தும் தவறுகள் நடப்பது ஏன்?

அவர் டி.வி.நடுவர் அல்ல, அவரை ‘உதவி நடுவர்’ (ஹெல்பிங் அம்பயர்) என்போம். கள நடுவருக்கு எத்தகைய சிரமங்கள் இருக்கிறதோ, அதே அளவிற்கு உதவி (டி.வி.) நடுவருக்கும் பல சிக்கல்கள் இருக்கிறது. கள நடுவர்கள் மைதானத்தில் நின்று, ஒரு கோணத்தில் மட்டுமே ஆட்டத்தை கவனிப்பார்கள். ஆனால் டி.வி.நடுவர், அவருக்கு முன்பாக இருக்கும் டி.வி.திரைகளின் வழியே பல கோணங்களில் ஆட்டத்தை கவனிப்பதோடு, வீரர்களின் செயல்பாட்டையும் கவனிப்பார். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியபோது, அதை கவனித்து களநடுவர்களிடம் தெரிவித்தது, டி.வி. நடுவர்தான். மேலும் ஆட்டம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ஆட்டத்தின் போக்கையும், நேரத்தையும் குறிப்பு எடுப்பதையும் முக்கிய பணியாக மேற்கொள்கிறார். இதற்கிடையில் களநடுவரின் ரன் அவுட், ஸ்டம்பிங், எல்.பி.டபிள்யூ அப்பீல் போன்ற சந்தேகங்களுக்கும் விடையளிப்பார். ஆனால் இது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. டி.வி.நடுவர் என்பவர், ஏ.சி.அறையில் ஓய்வெடுத்தபடி, களநடுவரின் சந்தேகங்களுக்கு மட்டுமே விடை காண்கிறார், என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தியும் தவறுகளை குறைக்க முடிய வில்லையே. ஏன்?

நவீன தொழில்நுட்பங்கள், நடுவரின் தீர்ப்பை குழப்புவதாகவே இருக்கிறது. ஒரு கேமரா ஆங்கிளில் அவுட் என தெரிவது, மற்றொரு ஆங்கிளில் அவுட் இல்லாதது போல தெரியும். இந்த குழப்பத்தில் இருந்து தெளிவதற்குள், கிரிக்கெட் சட்டத்திட்டங்களும் நடுவரை குழப்பிவிடும். அதனால்தான், பல சமயங்களில் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை கள நடுவர்களும், டி.வி.நடுவரும் வழங்கவேண்டியிருக்கிறது.

உள்ளூர் போட்டிகள், சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் மட்டுமே நடுவராக முடியுமா? நடுவராக பணியாற்ற எத்தகைய தகுதிகள் இருக்கவேண்டும்?

கிரிக்கெட் விளையாடியவர்கள் மட்டும்தான் நடுவராக பணியாற்ற முடியும் என்பதில்லை, கிரிக்கெட் சட்டத்திட்டங்களை அறிந்திருக்கும் சாதாரண ரசிகர்கூட, கிரிக்கெட் நடுவராக பணியாற்றலாம். நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இல்லாதவர்களும், கிரிக்கெட் நடுவர்களாக இருக்கிறார்கள். நடுவர் பணியை பொருத்தமட்டில், கிரிக்கெட் சட்டங்களையும், அதற்குள் இருக்கும் துணை சட்டங்களையும் முழுமையாக தெரிந்திருந்தாலே போதும். ஆட்டத்தின்போது நிலவும், அசாதாரண சூழ்நிலையை, துரிதமான தீர்ப்பால் தணித்துவிட முடியும்.

ஐ.பி.எல்.போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திர அஸ்வின், ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை ‘மேன் கிடிங்’ முறையில் ஆட்டம் இழக்க செய்தது, மைதானத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால் மேன்கிடிங் சட்டமுறையை நடுவர் அறிந்திருந்ததால்தான், அன்று அவுட் வழங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கிரிக்கெட் மைதானத்தில், எந்த ஆட்டத்தில் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அசாதாரண சூழ்நிலை உருவாகக்கூடும். அதை கிரிக்கெட் சட்டங்களின்படி சமாளிக்க, நடுவர்கள் பழகியிருக்க வேண்டும்.

சாமானியர் ஒருவர், கிரிக்கெட் நடுவராக ஆசைப்பட்டால், அதை எப்படி சாத்தியமாக்குவது?

நடுவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியாகும். அதை பயன்படுத்தி, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் (டி.என்.சி.ஏ.) நடத்தும் நடுவர் சேர்க்கையில் தங்களை பதிவுசெய்து கொண்டால், 15 நாட்கள் நடைபெறும் நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். அங்கு கிரிக்கெட் சட்டத்திட்டங்களை கற்றுக்கொள்வதோடு, மூத்த நடுவர் களின் ஆலோசனைகளையும் பெறமுடியும். இறுதியாக நடைபெறும் தேர்வுகளில், ‘கட்-ஆப்’ முறையில் நல்ல மதிப்பெண் பெறுபவர்கள், டி.என்.சி.ஏ. நடத்தும் கிரிக்கெட் போட்டிகளுக்கு, நடுவர்களாக அழைக்கப்படுவார்கள்.

அதேசமயம், இந்திய கிரிக்கெட் வாரியமும் (பி.சி.சி.ஐ.) அடிக்கடி நடுவர் சேர்க்கை முகாம்களை நடத்துகிறது. இங்கு, எழுத்து தேர்வோடு, நேர்காணல் மற்றும் செய்முறை தேர்வுகளும் நடத்தப்படும். கூடவே, மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படும். இவற்றில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பி.சி.சி.ஐ. நடத்தும் போட்டிகளில் நடுவராக பங்கேற்க முடியும்.

விளையாட்டு வீரர்களின் ஆட்டத்திறனுக்கு ஏற்ப, வருடந்தோறும் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதுபோல நடுவர்களுக்கு தரவரிசை பட்டியல் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும், நடுவர் வழங்கிய சாதக-பாதக தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும். இப்படி ஒருவருடத்திற்கான மொத்த மதிப்பெண்களையும் மதிப்பிட்டு, நடுவர்களுக்கான தரவரிசை பட்டியலை தயாரிப்பார்கள். அதில் ‘டாப்-20’ நடுவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, அதிகப்படியான ஆட்டங்களில் நடுவராக களமிறக்குவார்கள்.

நடுவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் என்ன?

நான் கடந்த வருடத்தில் 215 நாட்கள், நடுவர் பணிக்காக வீட்டை பிரிந்து இருக்கும் சூழ்நிலை உருவானது. அந்தசமயங்களில் என்னுடைய மனைவி மகாலட்சுமிதான், குடும்பத்தை கவனித்து கொண்டார். என்னுடைய மகன் சார்தக் (9 வயது), கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான். மகள் மைத்ரி (15 வயது) பள்ளிப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். மனைவி-குழந்தைகளின் பிரிவை தாண்டி, போட்டி நடக்கும் இடங்களுக்கு தரை மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் பிரபல ஊர்களையும், குக்கிராமங்களையும் கடந்துதான் கிரிக்கெட் மைதானத்திற்குள் செல்கிறோம். அதனால் நடுவரின் உள்ளம் மட்டுமல்ல, உடலும் சோர்ந்திருக்கும். மேலும், ஆட்டத்தில் ஏதாவது தவறான தீர்ப்பு வழங்கிவிட்டால், ரசிகர்களின் எதிர்ப்பையும், ஊடகங்களின் வசைபாடலையும் சமாளிக்கவேண்டியிருக்கும். ஆக மொத்தம், நடுவரின் பணியும் கடினம்தான் பாஸ். நாங்கள் முடிந்தவரை சரியான தீர்ப்புகளை, உடனடி தீர்வாக கொடுக்க நினைக்கிறோம். அது சிலசமயங்களில் தவறாகிவிடுகிறது.

Next Story