கிரிக்கெட்

உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை + "||" + Who's going to win the World Cup? England - New Zealand exam today

உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
தங்களது முதலாவது உலக கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் ம

லண்டன், 

தங்களது முதலாவது உலக கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட்

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30–ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் உலக கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் லண்டன் லார்ட்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இங்கிலாந்து அணி

‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து மிகுந்த நம்பிக்கையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. 1979, 1987, 1992–ம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு இறுதி சுற்று ஏமாற்றத்தில் முடிந்தாலும் இந்த முறை இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பழக்கப்பட்ட சீதோஷ்ண நிலை, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு என்று சாதிப்பதற்கு இதை விட சிறந்த தருணம் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு கிட்டாது. அத்துடன் லீக் சுற்றில் 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை புரட்டியெடுத்தது இங்கிலாந்தின் உத்வேகத்துக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது.

அதிரடி பேட்ஸ்மேன்கள்

இங்கிலாந்தின் பிரதான பலமே மின்னல்வேக பேட்டிங் தான். தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். இவர்கள் இந்த உலக கோப்பையில் 4 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்து பிரமாதப்படுத்தியுள்ளனர். ஜோ ரூட் (549 ரன்), கேப்டன் இயான் மோர்கன் (362 ரன்), பென் ஸ்டோக்ஸ் (381 ரன்), ஜோஸ் பட்லர் (253 ரன்) ஆகியோரும் இங்கிலாந்தின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் (13 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (19 விக்கெட்), மார்க் வுட் (17 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (11 விக்கெட்) மிரட்டுகிறார்கள். இதே கூட்டணி தான் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகளை முதல் 7 ஓவர்களுக்குள் வீழ்த்தி திணறடித்தது.

லீக் சுற்றில் மிடில் கட்டத்தில் கொஞ்சம் தள்ளாடினாலும் அதன் பிறகு வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிகளை அள்ளிய இங்கிலாந்து அணி, அதே ஆக்ரோ‌ஷத்துடன் இறுதிப்போட்டியையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது. உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் விளையாடும் போது, முக்கியமான தருணத்தில் பதற்றமின்றி திறம்பட சமாளிக்கும் பட்சத்தில் இங்கிலாந்தின் கையில் உலக கோப்பை தவழ்வதை தடுக்க முடியாது.

நியூசிலாந்து அணி எப்படி?

கணிக்க முடியாத ஒரு அணியான நியூசிலாந்து இறுதிப்போட்டி வரும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. லீக் சுற்றில் 5 வெற்றிகளுடன் தட்டுத்தடுமாறி அரைஇறுதியை எட்டிய நியூசிலாந்து அணி, அடுத்து முன்னாள் சாம்பியன் இந்தியாவை அரைஇறுதியோடு விரட்டியடித்தது.

தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் (கடைசி 5 ஆட்டத்தில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்துள்ளார்) பார்ம் இன்றி தவிக்கும் நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சனும் (2 சதத்துடன் 548 ரன்), முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் (3 அரைசதத்துடன் 335 ரன்) தான் அந்த அணியின் சுமை தாங்கிகளாக உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே நியூசிலாந்தின் தலைவிதி அமையும். நடப்பு தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட நியூசிலாந்து 300 ரன்களை எடுக்காவிட்டாலும் இறுதிகளத்திற்கு வந்திருப்பது உண்மையிலேயே வியப்புக்குரிய வி‌ஷயமாகும்.

நம்பிக்கை தரும் பவுலர்கள்

இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால், நியூசிலாந்து அணியில் பந்து வீச்சாளர்கள் கோலோச்சுகிறார்கள். அபாரமான பீல்டிங் நியூசிலாந்துக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். பந்து வீச்சில் லோக்கி பெர்குசன் (18 விக்கெட்), மேட் ஹென்றி (13 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (17 விக்கெட்), கிரான்ட்ஹோம் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள். அரைஇறுதியில் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்து டாப்–3 பேட்ஸ்மேன்களை தலா ஒரு ரன்னில் நியூசிலாந்து பவுலர்கள் காலி செய்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.

2015–ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ‘சரண்’ அடைந்த நியூசிலாந்து அணியினர் இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவதற்காக எல்லா வகையிலும் முனைப்பு காட்டுவார்கள்.

ஏறக்குறைய ஒரே பலத்துடன் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகை சூடும் அணி உலக கோப்பையை ருசித்த அணிகளின் பட்டியலில் 6–வது அணியாக இணையும்.

பரிசுத்தொகை

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், இறுதி ஆட்டத்தில் தோல்வி காணும் அணிக்கு ரூ.14 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

வானிலையை பொறுத்தவரை மழை பாதிப்பு இருக்காது. உள்ளூர் நிலவரப்படி காலையில் கொஞ்சம் மேகமூட்டம் இருக்கும். அதுவும் போக போக மறைந்து வெயில் நன்கு அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீ‌ஷம், கிரான்ட்ஹோம், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், பெர்குசன்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்

இங்கிலாந்து

லீக் சுற்று

தென்ஆப்பிரிக்காவுடன் 104 ரன்னில் வெற்றி

பாகிஸ்தானுடன் 14 ரன்னில் வெற்றி

வங்காளதேசத்துடன் 106 ரன்னில் வெற்றி

வெஸ்ட் இண்டீசுடன் 8 விக்கெட்டில் வெற்றி

ஆப்கானிஸ்தானுடன் 150 ரன்னில் வெற்றி

இலங்கையுடன் 20 ரன்னில் தோல்வி

ஆஸ்திரேலியாவுடன் 64 ரன்னில் தோல்வி

இந்தியாவுடன் 31 ரன்னில் வெற்றி

நியூசிலாந்துடன் 119 ரன்னில் வெற்றி

அரைஇறுதி

ஆஸ்திரேலியாவுடன் 8 விக்கெட்டில் வெற்றி

நியூசிலாந்து

லீக் சுற்று

இலங்கையுடன் 10 விக்கெட்டில் வெற்றி

வங்காளதேசத்துடன் 2 விக்கெட்டில் வெற்றி

ஆப்கானிஸ்தானுடன் 7 விக்கெட்டில் வெற்றி

இந்தியாவுடன் ஆட்டம் மழையால் ரத்து

தென்ஆப்பிரிக்காவுடன் 4 விக்கெட்டில் வெற்றி

வெஸ்ட் இண்டீசுடன் 5 ரன்னில் வெற்றி

பாகிஸ்தானுடன் 6 விக்கெட்டில் தோல்வி

ஆஸ்திரேலியாவுடன் 86 ரன்னில் தோல்வி

இங்கிலாந்துடன் 119 ரன்னில் தோல்வி

அரைஇறுதி

இந்தியாவுடன் 18 ரன்னில் வெற்றி

இங்கிலாந்து–நியூசிலாந்து

1 தரவரிசை 3

ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் 90 (டை2, முடிவில்லை4)

41 வெற்றி 43 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர் 9

4 வெற்றி 5 வெற்றி

டாஸ் முக்கியம்

இறுதிப்போட்டி அரங்கேறும் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியம் 30 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. நடப்பு தொடரில் நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் இறுதி ஆட்டத்திலும் ‘டாஸ்’ வெல்லும் அணி முதலில் பேட் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கும்.

‘‘1966–ம் ஆண்டு ‘பிபா’ கால்பந்து உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அதன் பிறகு அரைநூற்றாண்டு காலமாக உலக அளவிலான சர்வதேச போட்டிகளில் ஜொலித்ததில்லை. அந்த குறையை மோர்கன் படையினர் போக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’’.