கிரிக்கெட்

ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை + "||" + In a World Cup Captain Williamson's record for most runs

ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை

ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை
உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார்.

லண்டன், 

உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார். நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தையும் சேர்த்து வில்லியம்சன் 2 சதம் உள்பட 578 ரன்கள் குவித்து இருக்கிறார். இதற்கு முன்பு 2007–ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கையின் கேப்டனாக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே 548 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் சிறந்ததாக இருந்தது. அவரை வில்லியம்சன் முந்தி இருக்கிறார்.

மேலும் சில சாதனை விவரம் வருமாறு:–

*இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்காக ஒரு உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு 1992–ம் ஆண்டு உலக கோப்பையில் இயான் போத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

*இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 3 அல்லது அதற்கு மேல் விக்கெட் எடுத்த மூத்த பவுலர் இவர் தான். பிளங்கெட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 99 நாட்கள்.

*நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் 2 கேட்ச் செய்தார். இந்த உலககோப்பையில் கேட்ச், ஸ்டம்பிங் செய்த வகையில் மொத்தம் 21 பேரை அவர் ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார். இதன் மூலம் 2003–ம் ஆண்டு உலக கோப்பையில் அதிக பேரை விக்கெட் கீப்பிங் மூலம் வெளியேற்றிய ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டின்(21 அவுட்) சாதனையை சமன் செய்தார்.