வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி 19-ந் தேதி அறிவிப்பு


வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி 19-ந் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2019 10:34 PM GMT (Updated: 15 July 2019 10:34 PM GMT)

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 19-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 3-ந் தேதி நடக்கிறது. டெஸ்ட் போட்டி தொடர் செப்டம்பர் 3-ந் தேதி முடிவடைகிறது.

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கின்றனர். கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு குறுகிய வடிவிலான (20 ஓவர், ஒருநாள் போட்டி) போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் குணம் அடைந்து விட்டாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. 38 வயதான டோனி அணியில் இடம் பெறுவாரா? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பை போட்டியில் டோனி சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு குறித்து டோனி தான் முடிவு செய்ய முடியும்’ என்று கூறினார்.

வெஸ்ட்இண்டீஸ் தொடருடன் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரம் விரைவில் செய்யப்பட இருக்கிறது.

Next Story