குழந்தைகளே கிரிக்கெட் விளையாடாதீர்கள் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் ஆதங்கம்


குழந்தைகளே கிரிக்கெட் விளையாடாதீர்கள் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் ஆதங்கம்
x
தினத்தந்தி 15 July 2019 10:38 PM GMT (Updated: 15 July 2019 10:38 PM GMT)

இங்கிலாந்தில் நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.

லண்டன்,

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் நியூசிலாந்து அணியை விட கூடுதலாக 9 பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த தோல்வியால் நியூசிலாந்து வீரர்கள் மட்டுமின்றி அந்த நாட்டு ரசிகர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். போட்டிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் தனது டுவிட்டர் பதிவில், ‘குழந்தைகளே கிரிக்கெட் விளையாட்டை விளையாடாதீர்கள். நன்றாக சமையல் செய்யுங்கள் அல்லது வேறு ஏதாவது செய்யுங்கள். குண்டாகும் அளவுக்கு சாப்பிடுங்கள். மகிழ்ச்சியாக நாட்களை கழியுங்கள். கிரிக்கெட் விளையாடாதீர்கள். இந்த தோல்வி என்னை வேதனைப்படுத்தி விட்டது. அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு இந்த போட்டியின் கடைசி அரை மணி நேர ஆட்டத்தை நினைத்து பார்க்கமாட்டேன். இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் கோப்பையை வெல்ல தகுதி படைத்தவர்கள். எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதனை எங்களால் முழுமையாக செய்ய முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story