கடைசி ஓவரில் பீல்டிங்கின் போது மார்ட்டின் கப்தில் எறிந்த பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறு முன்னாள் நடுவர்கள் கருத்து


கடைசி ஓவரில் பீல்டிங்கின் போது மார்ட்டின் கப்தில் எறிந்த பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறு முன்னாள் நடுவர்கள் கருத்து
x
தினத்தந்தி 15 July 2019 11:12 PM GMT (Updated: 15 July 2019 11:12 PM GMT)

கடைசி ஓவரில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன் ஓடி ரன் எடுத்த போது நியூசிலாந்து பீல்டர் மார்ட்டின் கப்தில் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன் ஓடி ரன் எடுத்த போது நியூசிலாந்து பீல்டர் மார்ட்டின் கப்தில் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். அந்த பந்து கிரீசுக்குள் விழுந்த பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரியை தாண்டியது. இதனால் அந்த பந்தில் 6 ரன் நடுவர் வழங்கினார். கள நடுவர்கள் குமார் தர்மசேனா (இலங்கை), மாரிஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இந்த விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த பந்தில் 5 ரன்கள் தான் வழங்கி இருக்க வேண்டும். 5 ரன் வழங்கி இருந்தால் ஆட்டம் டை ஆக வாய்ப்பு இருந்து இருக்காது. இது குறித்து முன்னாள் சர்வதேச நடுவர் சிமோன் டபெல் (ஆஸ்திரேலியா) கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து அணிக்கு அந்த பந்தில் 5 ரன் தான் வழங்கி இருக்க வேண்டும். 6 ரன்கள் வழங்கி இருக்கக்கூடாது. இது தெளிவான தவறு. கணிப்பதில் தவறு நடந்துள்ளது’ என்றார். முன்னாள் சர்வதேச நடுவர் ஹரிஹரன் (இந்தியா) அளித்த பேட்டியில், ‘நியூசிலாந்து அணியின் உலக கோப்பை வாய்ப்பை நடுவர் குமார் தர்மசேனா கொன்று விட்டார். அந்த பந்துக்கு 5 ரன்கள் தான் வழங்கி இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது, ‘நடுவர்கள் விதிமுறையின் படி தான் முடிவு எடுக்கிறார்கள். இது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது’ என்று பதிலளித்தார்.

Next Story