கிரிக்கெட்

பவுண்டரியை வைத்து வெற்றி முடிவு: ஐ.சி.சி. விதிமுறைக்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு + "||" + ICC To the rule Former players protest

பவுண்டரியை வைத்து வெற்றி முடிவு: ஐ.சி.சி. விதிமுறைக்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

பவுண்டரியை வைத்து வெற்றி முடிவு: ஐ.சி.சி. விதிமுறைக்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பவுண்டரியை வைத்து வெற்றியை முடிவு செய்ததற்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் (இரு அணிகளும் தலா 241 ரன்கள்) டையில் முடிந்தது. வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் (இரு அணிகளும் தலா 15 ரன்கள்) டையில் நிறைவு பெற்றது.


இதனால் ஓட்டுமொத்தத்தில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி (26 பவுண்டரி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி (17 பவுண்டரி) 2-வது இடம் பெற்றது. பவுண்டரி அடிப்படையில் வெற்றியை முடிவு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட்டில் உள்ள இதுபோன்ற சில விதிமுறைகளை நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், ‘கிரிக்கெட்டில் இதுபோன்ற விதிமுறைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி அதிக பவுண்டரியை வைத்து முடிவு செய்து இருப்பது கேலிக்குரியதாகும். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இறுதிப்போட்டி திரில்லிங்காக இருந்தது’ என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங், ‘பவுண்டரியை வைத்து வெற்றியை முடிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் விதிமுறை, விதிமுறை தான். உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணிக்கும் வாழ்த்துகள். இறுதிப்போட்டி சிறப்பானதாக இருந்தது’ என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தனது பதிவில், ‘டக்வொர்த் லீவிஸ் விதிமுறை ரன்கள் சேர்ப்பது மற்றும் விக்கெட் இழப்பு அடிப்படையில் அமைகிறது. ஆனால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் பவுண்டரியை அடிப்படையாக வைத்து முடிவு எடுப்பதா?. என்னை பொறுத்தமட்டில் இது நியாயமான முடிவல்ல’ என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் டுவிட்டரில் கூறுகையில், ‘அருமையான வேலை செய்கிறீர்கள் ஐ.சி.சி..உங்கள் செயல் நகைப்புக்குரியது’ என்று தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டியான் நாஷ் அளித்த ஒரு பேட்டியில், ‘இறுதிப்போட்டி முடிவை ஏமாற்று வேலையாகவே கருதுகிறேன். அதிகமான பவுண்டரி அடித்த அணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தது போல் அதிக விக்கெட் அல்லது ‘ஆல்-அவுட்’ செய்த அணிக்கு ஏன் வெற்றி வாய்ப்பை வழங்கவில்லை. இந்த விதிமுறையை மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து முன்னாள் வீரர் மில்ஸ் டுவிட்டர் பதிவில், “போட்டி முடிவை ரன்கள் மற்றும் விக்கெட் அடிப்படையில் தான் கணக்கிட வேண்டும். ரன்னில் இரு அணியும் சமநிலையில் இருக்கையில் எந்த அணி விக்கெட் வீழ்த்தியதில் முன்னிலை வகிக்கிறது என்பதை தான் பார்த்து இருக்க வேண்டும். இது எதிர்பாராத முடிவாகும். விதிமுறை என்பதால் நாங்கள் புகார் தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.