டோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தேர்வுக்குழுவே நிராகரித்தால் அவமானமாக அமையும்: பிசிசிஐ என்ன செய்யும்?


டோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தேர்வுக்குழுவே நிராகரித்தால் அவமானமாக அமையும்:  பிசிசிஐ என்ன செய்யும்?
x

தேர்வுக்குழுவே டோனியை நிராகரித்தால் அவமானமாக அமையும். பிசிசிஐ என்ன செய்யும்? டோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...!

இந்தியாவில் இப்போது டோனியின் ஓய்வு பற்றிதான் முக்கிய பேச்சு நிலவி வருகிறது. அவரது ஓய்வு குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அவர் ஓய்வு பெற்று விடுவது நல்லது என்று ஒரு தரப்பும், இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம் என்று ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர்கள் சிலரும் கூட டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினை எதிர்ப்பார்த்தது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எந்தவொரு வீரரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா 648 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 443 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 9 போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் 361 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோகித், கோலி, ராகுல் ஆகிய மூன்று பேருக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்தவர் டோனிதான். 8 இன்னிங்சில் விளையாடி 273 ரன்கள் எடுத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா கூட 9 போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால், டோனி இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.

பேட்டிங் சராசரியைப் பொறுத்தவரை கூட ரோகித் (81), விராட் கோலி (55.38) ஆகிய இருவருக்கு அடுத்தப்படியாக டோனி 45.50 ரன் சராசரியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் கூட 45.12 ரன் சராசரிதான் வைத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா(32.29), ரிஷப் பண்ட் (29) ரன்ரேட் மட்டுமே வைத்துள்ளனர். மிடில் ஆர்டரில் விளையாடிய விஜய்சங்கர், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் என யாருமே பெரிதாக சோபிக்கவில்லை.

புள்ளி விவரங்கள் இப்படியிருக்க, டோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது  என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இது, டோனி ஓய்வு அறிவிப்பு வெளியிட நேரடியாக கொடுக்கப்படும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகியின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பிசிசிஐ நிர்வாகி கூறுவது போல், தேர்வுக்குழுவே டோனியை நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு இது ஒரு அவமானமாக அமையும்.

கடைசியில் சேவாக், கங்குலிக்கு ஏற்பட்ட நிலை டோனிக்கும் ஏற்பட்டுள்ளது. டோனிக்கு வயதாகி விட்டது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது சேவாக்கும் தனியார் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.

சேவாக் கூறும் போது, நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும்.

ஆனால் 2007க்கு பின்பெல்லாம் அப்படி நடக்கவில்லை. வீரர்களை நீக்கும் போது அவர்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது. சில வீரர்களை நீக்க அணி நிர்வாகம் யோசிக்கிறது. இந்திய அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அணியும், தேர்வு கமிட்டியும் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடக்கிறதா? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இது ஒருபுறம் இருக்க, நவம்பர் மாதம் பங்களாதேஷில்  நடைபெறவுள்ள முத்தரப்பு தொடர்தான் டோனிக்கு கடைசியாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தொடரில் தென்னாப்ரிக்காவும் விளையாடுகிறது. டோனியின் மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. அவரது பேட்டிங் முன்பு போல் இல்லை என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்திய அணிக்கே டோனி பயன்படமாட்டார் என்ற முடிவு சரியானதாக இருக்குமா எனத் தெரியவில்லை.

மூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த கேப்டனாகவும், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பினிஷராக வலம் வந்த டோனியை நல்ல முறையில் வழியனுப்பி வைப்பது பிசிசிஐ-யின் கடமையாகும். 

இந்த நிலையில்தான் டோனியின் மேனேஜர் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், டோனிக்கு இந்திய ராணுவத்தின் மீது தீவிர ஆர்வம் இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தில் முழு நேர பணியில் சேர வாய்ப்புள்ளது. இதற்காக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார் என கூறினார்.

தற்போது டோனி இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னலாக சிறப்பு பொறுப்பில் இருக்கிறார். அங்கு சிறப்பாக பயிற்சி பெற்ற அவர் பாலிடான் பேட்ச் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோனி தனது ஓய்விற்கு பின் அந்த பொறுப்பில் முழு நேரமாக தொடர்வதற்கு கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாலிடான் பேட்சை டோனி தனது கிளவுஸில் அணிந்து விளையாடியது உலகக் கோப்பை சமயத்தில் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Next Story