ஆஷஸ் தொடரிலும் சாதிப்போம் - இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உற்சாகம்


ஆஷஸ் தொடரிலும் சாதிப்போம் - இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உற்சாகம்
x
தினத்தந்தி 17 July 2019 12:02 AM GMT (Updated: 17 July 2019 12:02 AM GMT)

ஆஷஸ் தொடரிலும் சாதிப்போம் என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்தார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பையை வென்றதன் மூலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நிர்ணயித்த இலக்குகளில் பாதியை எட்டிவிட்டோம். அடுத்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் (ஆகஸ்டு 1-ந்தேதி பர்மிங்காமில் தொடக்கம்) முக்கியமானது. அதிலும் வெற்றி பெற்றால் தான் நாங்கள் கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைந்திருப்பதாக அர்த்தம். உலக கோப்பை வெற்றி, எங்களது வீரர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் நடந்த அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தோம். இதில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை அளித்தனர். இதை விட இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆஷஸ் தொடரில் போராட வேண்டும். எங்களை பொறுத்தவரை மற்ற தொடர்களில் இருந்து ஆஷஸ் கிரிக்கெட் நிச்சயம் வித்தியாசமானது. அது எங்களுக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்தது. அதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வென்ற போது எனக்கு வயது 14. அந்த போட்டியை டி.வி.யில் பார்த்தேன். அந்த போட்டி என்னை வெகுவாக ஈர்த்தது. அதே போல் இளம் வீரர்களை கவரும் வகையில் இந்த முறையும் சாதித்து காட்டுவோம் என்று நம்புகிறேன். இதற்காக கடினமாக உழைத்து வருகிறோம். இவ்வாறு ஜோ ரூட் கூறினார்.


Next Story