டோனி ஓய்வு பெற வற்புறுத்தக்கூடாது - சென்னையில் வாட்மோர் பேட்டி


டோனி ஓய்வு பெற வற்புறுத்தக்கூடாது - சென்னையில் வாட்மோர் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2019 12:09 AM GMT (Updated: 17 July 2019 12:09 AM GMT)

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்படி டோனியை வற்புறுத்தக்கூடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் வாட்மோர் தெரிவித்தார்.

சென்னை,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், 1996-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்தவருமான டேவ் வாட்மோர் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் விடாப்பிடியாக இருந்ததை இறுதிப்போட்டி பிரதிபலிப்பதாக இருந்தது. பவுண்டரி அடித்ததை கணக்கிட்டு உலக கோப்பையை வழங்க முடிவு எடுத்த விவகாரத்தை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம். மீண்டும் இறுதிப்போட்டியை நடத்தி இருக்கலாமா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் போட்டிக்கு முன்பே ஆட்டத்தின் விதிமுறை இரு அணிகளுக்கும் தெரிந்து இருக்கும்.

பவுண்டரியை வைத்து வெற்றியை முடிவு செய்யும் விதிமுறை அந்த சமயத்தில் எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நடுவர்களும் சராசரி மனிதர்கள் தான். அவர்களும் தவறு இழைப்பது இயல்பு தான். 2 முறை ஆட்டம் ‘டை’ ஆகி விட்டதால் அதிக பவுண்டரி அடித்த அணிக்கு தான் கோப்பை என்பது விதிமுறையாகும். அதன்படி இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டு இருக்கிறது.

இங்கு இருந்து கொண்டு விதிமுறை சரியாக இல்லை என்று பேசுவது எளிது தான். பவுண்டரியை கணக்கிட்டு வெற்றியை முடிவு செய்யும் விதிமுறை எனக்கு முன்பே தெரியாது. நிகர ரன் ரேட் விதிமுறை தான் எனக்கு தெரியும். இதுபோன்ற நிகழ்வு லட்சத்தில் ஒரு முறை நடக்கக்கூடியதாகும்.

உலக கோப்பை போட்டி தொடரில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. எதிர்பாராதவிதமாக சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. 4-வது வரிசை பிரச்சினை இந்திய அணியில் நீடிக்க தான் செய்கிறது. இது குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இந்திய அணி நிர்வாகம் தான் இதற்கு தீர்வு காண வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக முதல் 10 ஓவர்களில் மோசமாக செயல்பட்டது இந்திய அணிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

உலக கோப்பை போட்டியில் தற்போதைய போட்டி அட்டவணை முறையே சிறப்பானதாகும். ‘பிளே-ஆப்’ சுற்று முறை கொண்டு வர வேண்டும் என்பது சரியானது கிடையாது. டோனி சிறந்த வீரர். அவர் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்து இருக்கிறார். டோனி ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணமாகும். ஆனால் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று அவரை வற்புறுத்தக்கூடாது. ஓய்வு குறித்து தானாக முடிவு செய்ய காலஅவகாசம் அளிக்க தகுதியான நபர் அவர். இந்திய அணியின் 4-வது வரிசைக்கு சுப்மான் கில் பொருத்தமான வீரர். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story