உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்


உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்
x
தினத்தந்தி 18 July 2019 12:20 AM GMT (Updated: 18 July 2019 12:20 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதும், சுழற்பந்து வீச்சாளர்கள் சோடை போனதும் புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்தது. ஆனால் இறுதிப்போட்டி முடிவு மிகுந்த சர்ச்சையாகி விட்டது.

திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தலா 241 ரன்கள் எடுத்து ஆட்டம் சமனில் (டை) முடிந்ததால் ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்து சமனில் முடிந்ததால் யார் அதிக பவுண்டரி அடித்தார்கள் என்பது (பிரதான ஆட்டம் மற்றும் சூப்பர் ஓவரை சேர்த்து) கணக்கிடப்பட்டது. இந்த வகையில் நியூசிலாந்தை (17 பவுண்டரி) பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்துக்கு (26 பவுண்டரி) மகுடம் சூட்டப்பட்டது.

ஒரு வேளை பவுண்டரி கணக்கீடும் சமன் ஆகி இருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? 50 ஓவர் கொண்ட பிரதான ஆட்டத்தில் எந்த அணி பந்தை அதிக முறை எல்லைக்கோட்டிற்கு விரட்டியது என்பது பார்க்கப்படும். அதிலும் முடிவு கிடைக்காத நிலை எழுந்தால், சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் அதிக ரன் யார் எடுத்தார்கள் என்பது கணக்கில் கொள்ளப்படும். அரிதாக அதுவும் ஒரே மாதிரியாக நீடிக்கும் பட்சத்தில் அதற்கு முந்தைய பந்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இது தான் ஐ.சி.சி. விதிமுறையாகும்.

இந்த விதிமுறை மோசமானது, இதை மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டியில் இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படலாம்.

இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் சர்ச்சை காரணமாக மற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் போய் விட்டது. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

* இந்த உலக கோப்பை தொடர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மறக்கக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. மொத்தம் 57 சுழற்பந்து வீச்சாளர்கள் 1,282.3 ஓவர்கள் பந்து வீசி 12 மெய்டனுடன் 6,943 ரன்கள் விட்டுக்கொடுத்து 136 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒரு விக்கெட் எடுக்க 51.05 ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களின் பட்டியலில் முதல் 17 இடங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூட இடமில்லை. இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹல் (8 ஆட்டத்தில் 12 விக்கெட்) ஆவார். 1979-ம் ஆண்டுக்கு (சராசரி 65.25 ரன்னுக்கு ஒரு விக்கெட்) பிறகு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மோசமான உலக கோப்பையாக இது அமைந்திருக்கிறது.

*இந்த முறை வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. அதிலும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் கணிசமாக காணப்பட்டது. ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (27 விக்கெட்) இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதே போல் பேட்ஸ்மேன்களை மிரட்டிய வங்காளதேசத்தின் முஸ்தாபிஜூர் ரகுமான் (20 விக்கெட்), நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (17 விக்கெட்), பாகிஸ்தானின் முகமது அமிர் (17 விக்கெட்), ஷகீன் ஷா அப்ரிடி (16 விக்கெட்) ஆகியோரும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

*2003-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ரன்ரேட் அதிகரித்து வந்த நிலையில், இந்த முறை சற்று குறைந்து விட்டது. நடப்பு உலக கோப்பையில் ஓவருக்கு சராசரியாக ரன்ரேட் 5.59 ஆக பதிவாகியிருக்கிறது. 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் இது 5.65 ஆக இருந்தது.

*10 அணிகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில், முதலில் பேட் செய்த அணி 28 ஆட்டங்களிலும், 2-வது பேட் செய்த அணி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதுவும் தொடரின் முதல் பாதியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்யப்பட்ட ஆட்டங்களின் எண்ணிக்கை வெறும் 4 தான். அதன் பிறகு ஆடுகளத்தன்மை மாற்றம், சீதோஷ்ண நிலை மற்றும் நெருக்கடி காரணமாக ‘டாஸ்’ ஜெயித்த அணிகள் பெரும்பாலும் முதலில் பேட் செய்வதற்கு முன்னுரிமை அளித்ததை பார்க்க முடிந்தது.

* இந்த உலக கோப்பையில் ரன் குவிப்பில் டாப்-3 பேட்ஸ்மேன்களே அதிகமாக கோலோச்சினர். தொடர் முழுவதும் எடுக்கப்பட்ட ரன்களில் டாப்-3 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மட்டும் 51 சதவீதமாகும். இது 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை விட (43 சதவீதம்) அதிகமாகும். 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் டாப்-3 பேட்ஸ்மேன்களின் ரன்வேட்டை 48 சதவீதமாக இருந்தது.

*நடப்பு தொடரில் 400 ரன்களுக்கு மேல் 11 பேர் குவித்து இருந்தனர். இதில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தவிர மற்ற 10 பேரும் டாப்-3 பேட்ஸ்மேன்கள் ஆவர். இதிலும் வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் (606 ரன்), நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (578 ரன்), பாகிஸ்தானின் பாபர் அசாம் (474 ரன்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (456 ரன்), இந்தியாவின் விராட் கோலி (443 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடியவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த உலக கோப்பையில் 3-வது வரிசை ஆட்டக்காரர்களின் பேட்டிங் சராசரி 52.47. இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளிலேயே 3-வது வரிசை பேட்ஸ்மேன்களின் மிகச்சிறந்த சராசரி கொண்ட உலக கோப்பை இது தான். இதற்கு அடுத்த இடத்தில் 1987-ம் ஆண்டு உலக கோப்பை தொடர் (சராசரி 43.40 ரன்) உள்ளது.

* 4 அணிகளின் கேப்டன்கள் (வில்லியம்சன், பாப் டு பிளிஸ்சிஸ், விராட் கோலி, ஆரோன் பிஞ்ச்) 300-க்கும் மேலாக ரன்கள் சேர்த்ததுடன், சராசரியையும் 50 ரன்களுக்கு மேலாக கொண்டுள்ளனர். இத்தகைய சாதனையை முந்தைய உலக கோப்பை போட்டிகளில் 2 கேப்டன்களுக்கு மேல் செய்ததில்லை.

* இந்த உலக கோப்பையில் ஆடிய 10 அணி கேப்டன்களின் ஒட்டுமொத்த சராசரி ரன் 42.94. இந்த வகையில் 1975-ம் ஆண்டு (சராசரி 49.14) உலக கோப்பைக்கு பிறகு கேப்டன்களின் மெச்சத்தகுந்த செயல்பாடு இது தான்.


Next Story