டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்
x
தினத்தந்தி 19 July 2019 12:06 AM GMT (Updated: 19 July 2019 12:06 AM GMT)

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல்,

நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களையும் அடையாளம் கண்டு வாய்ப்பு அளித்து அவர்களது தரத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் உருவாக்கப்பட்டது தான், தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். போட்டி 2016-ம் ஆண்டு உதயமானது. முதலாவது சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், 2017-ம் ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கடந்த ஆண்டில் மதுரை பாந்தர்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், டி.நடராஜன், ஜெகதீசன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் அசத்தியதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எல். மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சிவீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானம் ஆகிய இடங்களில் தலா 15 ஆட்டங்களும், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட 2 ஆட்டமும் நடத்தப்படுகிறது.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் நத்தத்தில் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரரும், ஆல்-ரவுண்டருமான விஜய் சங்கர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய போது பந்து தாக்கி கால்பாதத்தில் காயமடைந்தார். இதற்கு காலில் கட்டுபோட்டுள்ள அவர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் அவர் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு இல்லை. என்றாலும் அவரும் அணியிருடன் பயணித்து ஊக்கப்படுத்துகிறார்.

முந்தைய தொடர்களில் தூத்துக்குடி அணிக்காக ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் இணைந்துள்ளார். அவரது வருகை கில்லீஸ் அணியை வலுப்படுத்தியுள்ளது. அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சசிதேவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் முருகன் அஸ்வின், அலெக்சாண்டர், புதுமுகங்களான மலிங்கா பாணியில் பந்து வீசக்கூடிய ஜி.பெரியசாமி, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெபசெல்வின், ஆல்-ரவுண்டர் சந்தானசேகர் மற்றும் டிவிசன் லீக் கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்த ஆரிப் உள்ளிட்டோரும் இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறுகையில், ‘நாங்கள் முந்தைய சீசன்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். முதலாவது ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். 2017-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினோம். இதே போல் இந்த முறையும் கோப்பையை வெல்ல முழு முயற்சியையும் காட்டுவோம். ஒரு அணியாக நாங்கள் வலுவாக உள்ளோம். இந்த ஆண்டில் நன்றாக ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.



கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அணியான திண்டுக்கல் டிராகன்சும் பலம் வாய்ந்த அணியாகவே தென்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய அனுபவசாலியான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், இங்கிலாந்தில் நாட்டிங்காம்ஷைர் கவுண்டி அணிக்காக 3 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கவுண்டி போட்டியை முடித்துக் கொண்டு அவர் தாயகம் திரும்பி விட்டார். இந்த ஆண்டில் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக விளையாடுவேன் என்று அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் முழுமையாக அவர் ஆடுவார் என்று அந்த அணியின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த அணியில் அங்கம் வகிக்கும் ஆர்.அஸ்வின், விக்கெட் கீப்பர் ஜெகதீசன், சதுர்வேத், ஹரிநிஷாந்த், முகமது, ரோகித் உள்ளிட்டோர் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். மேலும், கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்கு இந்த தடவை பரிகாரம் தேடும் வகையில் ஆடுவார்கள் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும்.

திண்டுக்கல் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கூறுகையில், ‘எங்களுக்குரிய தனித்துவமான கிரிக்கெட் ஆட்டத்தை நாங்கள் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். மறுபடியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, இந்த தடவை மகுடம் சூட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். சரியான கலவையில் அணி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். விக்கெட் கீப்பர் ஜெகதீசன் கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதன் மூலம் நிறைய அனுபவம் கிடைத்தது. பல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதை இங்குள்ள களத்தில் செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

சரிசம பலத்துடன் களம் காணும் இவ்விரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. பிரபல கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் கோப்பையை அறிமுகம் செய்து போட்டியை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), கோபிநாத், விஜய் சங்கர், முருகன் அஸ்வின், ஹரிஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தானசேகர், டி.ராகுல், தாவித் குமார், ஜி.பெரியசாமி, அலெக்சாண்டர், ஆரிப், அருண்குமார், சிவகுமார், சசிதேவ், பி.ராகுல், ஜி.ஆனந்த், சன்னிகுமார் சிங், சம்ருத்பட், பி.அருண், சித்தார்த், ஜெபசெல்வின்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஜெகதீசன், ஆதித்யா அருண், அபினவ், சதுர்வேத், ஹரிநிஷாந்த், ஜே.கவுசிக், முகமது, ரோகித், சுஜய், சுமந்த் ஜெயின், சிலம்பரசன், விவேக், வருண் தோத்தாத்ரி, திரிலோக் நாக், யாழ் அருள்மொழி, பிரனேஷ், கார்த்திக் சரண், அன்பு.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3, விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.



பரிசுத்தொகை எவ்வளவு?

இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைக்கும். பிளே-ஆப் சுற்றில் விளையாடும் மற்ற இரு அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும்.

ஊரக வீரர்கள் 81 பேர் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் பிரதான ஸ்பான்சரான இந்தியா சிமெண்ட்சின் இணைத் தலைவர் எஸ்.கே.பழனியப்பன் திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், டி.என்.பி.எல். கிரிக்கெட் சிறிய நகரங்கள், கிராமப்புற வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல தளமாக உள்ளது. இதில் சாதிப்பதன் மூலம் ஐ.பி.எல்., இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைக்கும். இதில் முழுக்க, முழுக்க உள்ளூர் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 8 அணிகளுக்கும் மொத்தம் 161 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 81 பேர் உள்ளூர் மாவட்ட அணி வீரர்கள் ஆவர். இந்த வகையில் நடப்பு தொடருக்கு புதிதாக 28 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு கோவையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்’ என்றார். டி.என்.பி.எல். ஊடக மேலாளர் பாபா கூறுகையில், ‘பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்டால் போட்டியை பார்க்க மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்’ என்றார்.


Next Story