கிரிக்கெட்

அரசியல் தலையீடு எதிரொலி: ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் - ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை + "||" + ICC Suspends Zimbabwe Cricket Board With Immediate Effect

அரசியல் தலையீடு எதிரொலி: ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் - ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை

அரசியல் தலையீடு எதிரொலி: ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் - ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
லண்டன்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நிதி முறைகேடு நடந்து இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மாதம் அந்த நாட்டு அரசு வாரியத்தை கலைத்ததுடன் இடைக்கால நிர்வாக கமிட்டியை நியமித்தது. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நடவடிக்கையில் அரசியல் தலையீடு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.


இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்தது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் ஜிம்பாப்வே அணி சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. அத்துடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கப்பட்டு வரும் நிதியும் நிறுத்தப்படும். முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. இடைநீக்கம் செய்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.

தடை காரணமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெறும் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் அடுத்த கூட்டம் அக்டோபர் மாதத்தில் நடக்கிறது. அதற்குள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் விதிமுறையின் படி தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தால் இடைநீக்கம் நடவடிக்கையை கைவிடுவது குறித்து ஐ.சி.சி முடிவு செய்யும்.

ஜிம்பாப்வே அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சிகந்தர் ராஜா கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி கண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய போது ஏற்பட்ட வேதனையை விட இது மிகவும் மோசமானதாகும். இந்த தருணத்தில் எங்களது இதயம் சுக்குநூறாகி விட்டது. எங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இந்த மாதிரி முடிந்து போன அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. 2 ஆண்டுகள் தடை நீடித்தால் தற்போதைய வீரர்கள் பலரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விடும். சர்வதேச கிரிக்கெட் வீரர்களான நாங்கள் அடுத்து என்ன செய்வது?. எங்களது கிரிக்கெட் உபகரணங்களை எரித்து விட்டு வேறு வேலை தேட வேண்டியது தானா?. எங்களது கிரிக்கெட்டும், வாழ்வாதாரமும் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது’ என்றார்.