கிரிக்கெட்

தலையில் பந்து தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி + "||" + The ICC allow has decided to use substitutes for batsmen who hit the ball in the head

தலையில் பந்து தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி

தலையில் பந்து தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி
கிரிக்கெட்டில் தலையில் பந்து தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர்களை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது.
லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹூயூக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு உள்ளூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணம் அடைந்தார். ஹெல்மெட் அணிந்தாலும் சில சமயம் எகிறி சீறும் பந்துகள் தாக்கி வீரர்கள் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ‘பவுன்சர்’ பந்து தாக்கி தலைக்குள் ஏதோ அதிர்வு அதிகமாக இருக்கும் போது அச்சமடையும் வீரர்கள் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறி சிகிச்சை பெறுவது உண்டு.


இவ்வாறு பாதியில் வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதி கிடையாது. ஆனால் மாற்று பீல்டர்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் தலையில் பந்து தாக்கி தள்ளாடும் வீரர்களுக்கு பதிலாக மாற்று பேட்ஸ்மேன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 2016-17-ம் ஆண்டு முதல், மாற்று வீரர்கள் பயன்படுத்தும் திட்டம் பரீட்சார்த்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சில முதல்தர போட்டிகளில் இந்த நடைமுறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் லண்டனில் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பந்து தலையை பதம் பார்த்து வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்தும் திட்டத்துக்கு (சப்ஸ்டியூட்) ஒப்புதல் வழங்கியது. எல்லா வடிவிலான ஆண்கள், பெண்கள் சர்வதேச போட்டிக்கு மட்டுமின்றி, முதல்தர போட்டிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

தலையில் அடிபட்டு பயங்கர அதிர்ச்சியுடன் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு காயமடையும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரரை போட்டி நடுவரின் அனுமதியுடன் ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியும். அந்த வீரர் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கும் செய்யலாம். ஆனால் காயமடைந்த வீரர் எத்தகைய தன்மை கொண்ட பேட்ஸ்மேனோ அதே போன்ற வீரரையே சேர்க்க முடியும். இந்த விவகாரத்தை கவனிக்க ஒவ்வொரு அணியிலும் தனியாக மருத்துவ பிரதிநிதி இருக்க வேண்டும். அவர் தான் காயமடைந்த வீரரின் உடல்தகுதியை முடிவு செய்ய வேண்டும்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. அந்த தொடரில் இருந்து இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்றால் கேப்டன்களுக்கு ஓரிரு போட்டிகளில் தடை விதிக்கும் முறையை ஐ.சி.சி. அதிரடியாக நீக்கியுள்ளது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்சினையில் சிக்கினால் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஓராண்டுக்குள் 2-வது முறையாக இந்த பிரச்சினையில் சிக்கி தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை உயரும் பட்சத்தில், அந்த அணியின் கேப்டனுக்கு தடை விதிக்கப்படும்.

இந்த கடினமான முறையை தளர்த்தியுள்ள ஐ.சி.சி. இனி மெதுவாக பந்து வீசும் குற்றச்சாட்டு எழுந்தால் ஒட்டுமொத்த அணி வீரர்களுக்கும் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரை நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் உலக சாம்பியன்ஷிப் மகுடத்துக்கு கணக்கில் கொள்ளப்படும். இந்த போட்டிகளில் மெதுவாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டால், ஆட்டம் முடிந்ததும் குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இருந்து குறைக்கப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.