கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்: இந்திய அணி இன்று தேர்வு + "||" + Dhoni deviates from West Indies cricket series: Indian team selected today

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்: இந்திய அணி இன்று தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்: இந்திய அணி இன்று தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து டோனி விலகியுள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடெர்ஹில்லில் ஆகஸ்டு, 3, 4-ந்தேதிகளில் நடக்கிறது. கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் அரங்கேறும்.


இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து அணியை தேர்வு செய்கிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்ததால் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான 38 வயதான டோனி இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெற வேண்டும் என்று ஷேவாக், கவுதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் டோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறுவாரா? அல்லது கழற்றி விடப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பான யூகங்களுக்கு இப்போது டோனியே விடையளித்து விட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக கூறியுள்ள டோனி, அடுத்த 2 மாதங்கள் ராணுவத்தினருடன் இணைந்து தனது நேரத்தை செலவிட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார். ராணுவத்தில் அதிக பற்று கொண்ட டோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருப்பது நினைவு கூரத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகும் டோனியின் முடிவு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், டோனி இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

டோனிக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்று விக்கெட் கீப்பர் இடத்திற்கு விருத்திமான் சஹா தேர்வு செய்யப்படலாம்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதை மனதில் கொண்டே அணியின் தேர்வு இருக்கும். அந்த வகையில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் மற்றும் பிரித்வி ஷா உள்ளிட்டோரில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தால் உலக கோப்பை போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய ஷிகர் தவான், உடல்தகுதியை எட்டினால் அவர் அணியில் தொடருவார்.

20 ஓவர் உலக கோப்பை வரை டோனி விளையாட திட்டமா?

சமீபத்தில் நிறைவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் (50 ஓவர்) இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோனி ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் ஓய்வு குறித்து டோனி இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் வெளியான ஒரு பதிவில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியில் தோற்றதால் நீங்கள் (ரசிகர்கள்) மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பதை அறிவேன். எனது ஓய்வு குறித்து அதிகமாக பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் எனது அணியை விட்டு விலகுவதற்கு இது சரியான நேரம் அல்ல. ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நான் விளையாடுவேன். ஆதரவு தாருங்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.