கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்சை வீழ்த்தியது கோவை - முகுந்த் அரைசதம் விளாசினார் + "||" + TNPL Over 20 cricket kovai Kings won by 8 wickets

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்சை வீழ்த்தியது கோவை - முகுந்த் அரைசதம் விளாசினார்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்சை வீழ்த்தியது கோவை - முகுந்த் அரைசதம் விளாசினார்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை எளிதில் வீழ்த்தியது.
திண்டுக்கல்,

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.


இந்த நிலையில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த கோவை கிங்ஸ் கேப்டன் அபினவ் முகுந்த் முதலில் காஞ்சியை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய காஞ்சி வீரன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் முகிலேஷ் (0), விஷால் வைத்யா (1 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர்.

ஒரு ரன்னுக்குள் 2 விக்கெட்டை பறிகொடுத்து தள்ளாடிய காஞ்சி அணியை விக்கெட் கீப்பர் லோகேஷ்வரும், கேப்டன் பாபா அபராஜித்தும் காப்பாற்றினர். அபராஜித் 29 ரன்களில் கேட்ச் ஆனார். அரைசதம் அடித்த லோகேஷ்வர் 51 ரன்னிலும் (41 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 31 ரன்னிலும் வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் மணிகண்டனின் ஒரே ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய பிரான்சிஸ் ரோகின்ஸ் (25 ரன், 7 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் ஆகி அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு வித்திட்டார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காஞ்சி வீரன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. கோவை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மணிகண்டன் 3 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் 151 ரன்கள் இலக்கை நோக்கி கோவை கிங்ஸ் அணி விளையாடியது. அதிரடியில் அட்டகாசப்படுத்திய கோவை தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் அபினவ் முகுந்தும், ஷாருக்கானும் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் (6.5 ஓவர்) சேர்த்தனர். ஷாருக்கான் 40 ரன்களில் (21 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கிளன் போல்டு ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய ரஞ்சன்பால் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். மறுமுனையில் கேப்டன் அபினவ் முகுந்த் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அத்துடன் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்றார்.

கோவை கிங்ஸ் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. அபினவ் முகுந்த் 70 ரன்களுடனும் (44 பந்து, 12 பவுண்டரி), அனிருத் சீத்தா ராம் 22 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.