எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது டோனிக்கு தெரியும் - தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேட்டி


எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது டோனிக்கு தெரியும் - தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2019 11:45 PM GMT (Updated: 21 July 2019 11:45 PM GMT)

மூத்த வீரரான டோனிக்கு கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது தெரியும் என்று இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிறகு இந்திய தேர்வு கமிட்டி தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மூத்த வீரர் 38 வயதான டோனியின் எதிர்காலம் குறித்து நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், ‘ஓய்வு அறிவிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. அதுவும் டோனி போன்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதும் தெரியும். அதில் நாங்கள் தலையிட முடியாது. அணியின் எதிர்கால நலனுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தேர்வு கமிட்டியின் கையில் உள்ளது. அதற்குரிய பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். மேலும் இந்த தொடருக்கான அணித் தேர்வில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று டோனி கேட்டுக் கொண்டார். அதனால் அது பற்றி மேற்கொண்டு பேச தேவைவில்லை.

விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷாப் பண்டுவை தேர்வு செய்துள்ளோம். முடிந்த அளவுக்கு அவருக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்க தீர்மானித்துள்ளோம். அதன் பிறகு அவர் எந்த அளவுக்கு முன்னேற்றம் காண்கிறார் என்பதை பார்ப்போம். இது தான் எங்களது இப்போதைய திட்டம். இது பற்றி டோனியிடம் ஏற்கனவே விவாதித்து இருக்கிறோம்’ என்றார்.

ஒரு வேளை இந்த தொடரில் டோனி விளையாட தயாராக இருந்திருந்தால் அவரை தேர்வு செய்திருப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘டோனி இப்போது உடல்தகுதியுடன் இல்லை. அவர் உடல்தகுதியை எட்டி, அடுத்த போட்டிக்கு விளையாட தயாராக இருக்கும் போது என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்’ என்று பதில் அளித்தார்.

தினேஷ் கார்த்திக் குறித்து கேட்ட போது, ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை சில திட்டங்களை வகுத்திருந்தோம். உலக கோப்பை போட்டியுடன் அது முடிந்து போய் விட்டது. இனி அணியில் நீண்ட காலம் விளையாடும் வகையில் இளம் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு வழங்குவது அவசியமாகும்’ என்றார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 4-வது வரிசை வீரருக்கு அம்பத்தி ராயுடு பொருத்தமான வீரராக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்ட தேர்வு கமிட்டி, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கியது. ‘விஜய் சங்கர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என்று முப்பரிமாணம் திறமை கொண்டவர்’ என்று அப்போது தேர்வு கமிட்டி கூறியது. இதை மறைமுகமாக கேலி செய்த அம்பத்தி ராயுடு, ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க 3 டி கண்ணாடிக்கு ஆர்டர் செய்துள்ளேன்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உலக கோப்பை போட்டிக்கான மாற்று வீரர்களின் பட்டியலில் அம்பத்தி ராயுடு வைக்கப்பட்டிருந்தார். தவான், விஜய் சங்கர் காயத்தால் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகிய போது மாற்று வீரர்களாக ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்தி ராயுடு எல்லா வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெற்றார்.

அம்பத்தி ராயுடு விவகாரம் குறித்து தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்ட போது, ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அம்பத்தி ராயுடுவின் அந்த டுவிட் பதிவை நான் மிகவும் ரசித்து மகிழ்ந்தேன். சரியான நேரத்தில் பதிவிட்ட அருமையான டுவிட். பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போய் விட்டது.

மற்றபடி அவருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டோம் என்று கூறுவது சரியல்ல. நாங்கள் யாருக்கும் எதிராகவோ அல்லது சாதகமாகவோ செயல்படவில்லை. அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் அவர் எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு, வருத்தமடைந்திருப்பார் என்பது தெரியும். இதே உணர்வில் தான் நாங்களும் இருக்கிறோம். முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவருக்காக வருந்துகிறேன். தவான் காயத்தால் வெளியேறிய போது, இடக்கை பேட்ஸ்மேன் தேவை என்று அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால், ரிஷாப் பண்டை தேர்வு செய்தோம்’ என்றார்.


Next Story