வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு தவான் திரும்பினார் - பாண்ட்யாவுக்கு ஓய்வு, டெஸ்ட் போட்டிக்கு பும்ரா சேர்ப்பு


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு தவான் திரும்பினார் - பாண்ட்யாவுக்கு ஓய்வு, டெஸ்ட் போட்டிக்கு பும்ரா சேர்ப்பு
x
தினத்தந்தி 22 July 2019 12:04 AM GMT (Updated: 22 July 2019 12:04 AM GMT)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட தவான் அணிக்கு திரும்பினார். பும்ரா டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு கமிட்டி தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். கேப்டன் விராட் கோலியும் அணித் தேர்வு விவாதத்தில் பங்கேற்றார். இதன் முடிவில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தனித்தனியாக அணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. விராட்கோலிக்கு சில போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரே இந்த தொடர் முழுவதும் கேப்டன் பணியை கவனிக்க இருக்கிறார்.

இரண்டு மாத காலம் ராணுவத்தில் சேவையாற்ற விரும்புவதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தன்னால் ஆட இயலாது என்று விக்கெட் கீப்பர் டோனி ஏற்கனவே தெரிவித்து விட்டதால் விக்கெட் கீப்பராக 21 வயதான ரிஷாப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். டெஸ்ட் அணிக்கு மாற்று விக்கெட் கீப்பர் இடத்தை விருத்திமான் சஹா நிரப்புகிறார். 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது தோள்பட்டையில் காயமடைந்து ஆபரேஷன் செய்து கொண்ட சஹா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்.

விரலில் ஏற்பட்ட காயத்தால் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாதியில் வெளியேறிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உடல்தகுதியை எட்டி விட்டதால் அணிக்கு திரும்புகிறார். அதே சமயம் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார்.

இந்திய ‘ஏ’ அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பேட்ஸ்மேன்களான மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். பணிச்சுமையை கருத்தில் கொண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலக்கி வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் 19 வயதான ராகுல் சாஹர் 20 ஓவர் போட்டிக்கான அணியில் புதுமுக வீரராக தேர்வாகி உள்ளார். இதே போல் டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். தொடர்ச்சியாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் அங்கம் வகிக்கிறார். காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாத தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

அணிகள் விவரம்

20 ஓவர் தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே (துணை கேப்டன்), புஜாரா, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட் விருத்திமான் சஹா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.


Next Story