வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 22 July 2019 7:41 AM GMT (Updated: 22 July 2019 11:37 PM GMT)

வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

ஆன்டிகுவா,

மனிஷ் பாண்டே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களில் 236 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 77 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் நல்ல தொடக்கம் கண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி அதன் பிறகு சரிவை சந்தித்தது.

அதிகபட்சமாக ஷெர்பான் ருதர்போர்டு 65 ரன்னும் (70 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), தொடக்க ஆட்டக்காரர் சுனில் அம்ப்ரிஸ் 61 ரன்னும் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), காரி பிர்ரே ஆட்டம் இழக்காமல் 35 ரன்னும் (34 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது, குருணல் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய ‘ஏ’ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 110 ரன்னாக உயர்ந்த போது சுப்மான் கில் (69 ரன்கள், 40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) கார்ன்வால் பந்து வீச்சில் அகீம் ஜோர்டானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் (99 ரன்கள், 89 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) கீமோ பால் பந்து வீச்சில் காரி பிர்ரேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

33 ஓவர்களில் இந்திய ‘ஏ’ அணி 2 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 61 ரன்னுடனும் (64 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மனிஷ் பாண்டே 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ‘ஏ’ அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஆட்டத்தில் மட்டும் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி பெற்று இருந்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த் சவுண்டில் நாளை தொடங்குகிறது.


Next Story