முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்


முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 July 2019 12:10 AM GMT (Updated: 23 July 2019 12:10 AM GMT)

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நெல்லை,

4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 115 ரன்களுக்குள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை கட்டுப்படுத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறியதால் வெற்றி வாய்ப்பை இழந்தது.



இதேபோல் சாய் கிஷோர் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையிடம் போராடி வீழ்ந்தது. இரு அணிகளும் 171 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் திருச்சி அணி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்னே எடுத்தது. காரைக்குடி காளை அணி 4 பந்துகளில் 13 ரன் எடுத்து திரில் வெற்றியை ருசித்தது.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இரு அணிகளும் முதல் வெற்றியை தன்வசப்படுத்த கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத், ஆரிப், சசிதேவ், முருகன் அஸ்வின், சித்தார்த், ஹரிஷ்குமார், டி.ராகுல். அலெக்சாண்டர், பெரியசாமி.

திருச்சி வாரியர்ஸ் : எஸ்.அரவிந்த், எம்.விஜய், ஆதித்ய பாரோக், மாருதி ராகவ், கணபதி சந்திரசேகர், மணிபாரதி, சாய்கிஷோர் (கேப்டன்), சரவணகுமார், எல்.விக்னேஷ், கே.விக்னேஷ், பொய்யாமொழி.


Next Story