கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சுனில் நரின்-பொல்லார்ட் + "||" + 20-over cricket against India: Sunil Narin-Pollard is back in the West Indies

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சுனில் நரின்-பொல்லார்ட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சுனில் நரின்-பொல்லார்ட்
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் நரின், பொல்லார்ட் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்டிகுவா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் புளோரிடாவில் (ஆகஸ்டு 3 மற்றும் 4-ந்தேதி) நடத்தப்படுகிறது. கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும்.


இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஏறக்குறைய 2 ஆண்டுக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதே போல் 9 மாதங்களுக்கு பிறகு ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட்டும் அணிக்கு திரும்புகிறார்.

இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது பாதியில் விலகிய ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் இடத்தை தக்க வைத்துள்ளார். ஆனால் தொடருக்கு முன்பாக அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்பட்டு அதில் தேறினால் மட்டுமே போட்டியில் களம் இறங்குவார்.

‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல், கனடாவில் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவதால் தன்னால் முதல் 2 ஆட்டங்களில் ஆட இயலாது என்று கூறி விட்டதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. மாற்று விக்கெட் கீப்பராக புதுமுக வீரர் 28 வயதான அந்தோணி பிராம்பிள் தேர்வாகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு கமிட்டியின் இடைக்கால தலைவர் ராபர்ட் ஹெய்ன்ஸ் கூறுகையில், ‘இளமையும், அனுபவமும் கூடிய மிகச்சரியான கலவையில் அணி அமைந்துள்ளது. இது தற்போதைய இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அணி மட்டுமல்ல. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்துள்ளோம். உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கு, சரியான கூட்டணியில் கச்சிதமான வீரர்கள் அடங்கிய அணியை கண்டறிவது மிகவும் முக்கியமாகும். எங்கள் அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆடியவர்கள். அதனால் அவர்களுக்கு இந்திய வீரர்கள் பற்றி நன்கு தெரியும். அது மட்டுமின்றி உள்ளூரில் ஆடுவது எங்களுக்கு சாதகமான அம்சமாகும். எது எப்படி என்றாலும் களம் கண்டு கடும் சவால் அளிப்பது மட்டுமல்ல, வெற்றி பெறுவதே முக்கியமானது’ என்றார்.

கடைசி 20 ஓவர் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. முதல் இரண்டு 20 ஓவர் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:- கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), சுனில் நரின், கீமோ பால், கேரி பியர், பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஜான் கேம்ப்பெல், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மயர், இவின் லீவிஸ்.