5 விக்கெட் வீழ்த்தியதை விட வெற்றி பெற்றது தான் மகிழ்ச்சி அளிக்கிறது - அலெக்சாண்டர்


5 விக்கெட் வீழ்த்தியதை விட வெற்றி பெற்றது தான் மகிழ்ச்சி அளிக்கிறது - அலெக்சாண்டர்
x
தினத்தந்தி 25 July 2019 12:03 AM GMT (Updated: 25 July 2019 12:03 AM GMT)

5 விக்கெட் வீழ்த்தியதை விட அணிக்கு வெற்றி தேடித்தந்ததே மிகவும் சந்தோஷம் அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நெல்லையில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தியது. இதில் கில்லீஸ் நிர்ணயித்த 149 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்களுக்கு சுருண்டது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். டி.என்.பி.எல். போட்டி யில் ஒரு பவுலரின் சிறந்தபந்து வீச்சாக இது அமைந்தது. ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட 24 வயதான அலெக்சாண்டர் கூறியதாவது:-

முதல்முறையாக ஆட்டநாயகன் விருது பெற்று இருக்கிறேன். 5 விக்கெட் வீழ்த்தியதை விட அணி வெற்றி பெற்றது தான் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி அணியாக இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. சிறந்த பந்து வீச்சை பதிவு செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு நன்றாக செயல்படவில்லை. இதனால் இந்த முறை நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற பசி எனக்குள் இருந்தது. அதைத்தான் செய்து காட்டியிருக்கிறேன்.

கேப்டன் கவுசிக் காந்தி ‘ரன் போனால் பரவாயில்லை. விக்கெட் எடுக்க வேண்டும்’ என்று என் மீது நம்பிக்கை வைத்து பந்து வீச அழைத்தார். நானும் ரன் விட்டுக்கொடுப்பது பற்றியோ அல்லது எங்கு சிக்சர்கள் அடிக்கிறார்கள் என்பது பற்றியோ கவலைப்படாமல் விக்கெட் வீழ்த்துவதில் மட்டும் கவனமுடன் செயல்பட்டேன்.

5 விக்கெட் கைப்பற்றியதும் மைதானத்தில் ‘தண்டால்’ எடுத்து வித்தியாசமாக கொண்டாடியது குறித்து கேட்கிறீர்கள். முதலாவது சீசனில் இருந்தே 5 விக்கெட் எடுத்தால் நாம் எந்த மாதிரி கொண்டாட வேண்டும் என்ற யோசனை இருந்து வந்தது. அந்த திட்டமிடலின் வெளிப்பாடு தான் இந்த உற்சாகமான கொண்டாட்டம். இவ்வாறு அலெக்சாண்டர் கூறினார்.


Next Story