கிரிக்கெட்

30 சிக்சர் நொறுக்கப்பட்ட ஆட்டம்: கோவையை வீழ்த்தி தூத்துக்குடி முதல் வெற்றி + "||" + Tuticorin's first victory over Goa

30 சிக்சர் நொறுக்கப்பட்ட ஆட்டம்: கோவையை வீழ்த்தி தூத்துக்குடி முதல் வெற்றி

30 சிக்சர் நொறுக்கப்பட்ட ஆட்டம்: கோவையை வீழ்த்தி தூத்துக்குடி முதல் வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பலத்த மழை காரணமாக ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த கோவை கேப்டன் அபினவ் முகுந்த் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியில் 2-வது பந்திலேயே செந்தில்நாதன் (0) அவுட் ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் மற்றவர்கள் அதிரடியில் வெளுத்து கட்டினர். கேப்டன் சுப்பிரமணியசிவாவும், அக்‌ஷய் சீனிவாசனும் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. சீனிவாசன் 4 சிக்சர் உள்பட 31 ரன்களும், கேப்டன் சுப்பிரமணியசிவா 2 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 44 ரன்களும் (21 பந்து) விளாசினர். பின்னர் வந்த வீரர்களும் மட்டையை சுழட்டியதால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. அபிஷேக் 20 ரன்களும் (3 சிக்சர்), வசந்த் சரவணன் 29 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நாதன் 11 ரன்களும் (ஒரு சிக்சர்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்தது.

அடுத்து களம் கண்ட கோவை அணிக்கு 13 ரன்னுக்குள் 3 விக்கெட் விழுந்தது. இதன் பிறகு நுழைந்த அந்தோணிதாஸ் சிக்சர் வேட்டையுடன் விசுவரூபம் எடுத்தார். அவர் ஆடிய விதம் தூத்துக்குடி வீரர்களை மிரள வைத்தது.

12-வது ஓவரில் அந்தோணிதாஸ் (63 ரன், 26 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனதும் ஆட்டம் தூத்துக்குடி பக்கம் திரும்பியது. 13 ஓவர்களில் கோவை கிங்சால் 7 விக்கெட்டுக்கு 149 ரன்களே எடுத்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 6 ரன் வித்தியாசத்தில் தனது முதலாவது வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்தில் தூத்துக்குடி 15, கோவை கிங்ஸ் 15 என்று மொத்தம் 30 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. டி.என்.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு 22 சிக்சர்கள் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.