இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு புதிய ஸ்பான்சர்


இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு புதிய ஸ்பான்சர்
x
தினத்தந்தி 25 July 2019 10:00 PM GMT (Updated: 25 July 2019 9:34 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு புதிய ஸ்பான்சர்

புதுடெல்லி, -

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்குரிய ஸ்பான்சர்ஷிப்பை இப்போது சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ அளித்து வருகிறது. அதனால் தான் இந்திய வீரர்களின் சீருடையில் ஓப்போ நிறுவன பெயர் பெரிய அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்கான உரிமத்தை 2017-ம் ஆண்டில் 5 ஆண்டு அடிப்படையில் ரூ.1,079 கோடிக்கு ஓப்போ நிறுவனம் பெற்று இருந்தது. அதாவது இரு நாட்டு தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ரூ.4.61 கோடியும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய தொடர்களின் போது ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ரூ.1.56 கோடியும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஓப்போ வழங்க வேண்டும்.

இந்த நிலையில் தொடர்ந்து இதே தொகையை தங்களால் வழங்க இயலாது, அதனால் ஒதுங்கிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஓப்போ நிறுவனம் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது. அதே சமயம் இந்திய அணியின் சீருடைக்குரிய ஸ்பான்சர்ஷிப் அளிக்க பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான பைஜூஸ் முன்வந்தது. மாற்று ஏற்பாடு செய்வதற்காக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓப்போ ஸ்பான்சர்ஷிப் முடிவுக்கு வருகிறது.

செப்டம்பர் மாதம் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அது முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரை இந்திய அணியின் சீருடையில் பைஜூஸ் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்று இருக்கும். புதிய ஒப்பந்தத்தின்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த வித இழப்பீடும் ஏற்படாது. ஓப்போ வழங்கிய அதே தொகையை பைஜூஸ் நிறுவனம் வழங்கும்.

Next Story