இலங்கை-வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் கொழும்பில் இன்று நடக்கிறது


இலங்கை-வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் கொழும்பில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 9:40 PM GMT)

இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது.

கொழும்பு, 

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி 6-வது இடத்தையும், வங்காளதேச அணி 8-வது இடத்தையும் பெற்றன. உலக கோப்பைக்கு பிறகு நடக்கும் முதல் ஒரு நாள் தொடர் இது தான். உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

தமிம் இக்பால் கேப்டன்

வங்காளதேச அணியில் கேப்டன் மோர்தசா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக தமிம் இக்பால் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை கவனிக்க இருக்கிறார். ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த நம்பிக்கையுடன் வங்காளதேச அணி களம் காணும்.

இந்த போட்டி தொடருக்கான இலங்கை அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாமுக்கான அணியில் இடம் பிடித்து இருந்த நிரோஷன் டிக்வெல்லா, குணதிலகா, லக்‌ஷன் சண்டகன், லஹிரு மதுஷங்கா, அமிலா அல்போன்சா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. கருணாரத்னே கேப்டனாக நீடிக்கிறார். மேத்யூஸ், திசரா பெரேரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா உள்ளிட்டோரும் அணியில் உள்ளனர்.

மலிங்கா ஓய்வு பெறுகிறார்

வங்காளதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்துடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான மலிங்கா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மலிங்காவை வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் எதிரணிக்கு எதிர்பாராதவிதமாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய வங்காளதேச அணி தொடரை வெற்றியுடன் தொடங்க போராடும்.

இலங்கை-வங்காளதேச அணிகள் இதுவரை ஒருநாள் போட்டியில் 45 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 36-ல் இலங்கையும், 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story