கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் + "||" + Ashes Test against England: 7 fast bowlers in the Australian team

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் 7 வேகப்பந்து வீச்சாளர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் 7 வேகப்பந்து வீச்சாளர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இந்த இரு நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு காலமாக நடக்கும் பாரம்பரியமிக்க தொடராகும்.


இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த பயிற்சி ஆட்டத்தில் 93 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் மீண்டும் தேர்வாகியுள்ளார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் 9 மாத கால தடைக்கு பிறகு அவர் தேசிய அணிக்கு திரும்புவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் 2016-ம் ஆண்டுக்கு பிறகு அழைக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நீடிக்கிறார். மாற்று விக்கெட் கீப்பர் இடத்தை மேத்யூ வேட் பிடித்துள்ளார். இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் அதை கருத்தில் கொண்டு மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ் மற்றும் புதுமுக வீரர் மைக்கேல் நேசர் என்று 7 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரதான சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் மட்டுமே அங்கம் வகிக்கிறார். மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிசுக்கு இடமில்லை.

தேர்வு குழு தலைவர் டிரேவோர் ஹான்ஸ் கூறுகையில், ‘இது 6 வார காலம் நடக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். தொடர் முழுவதும் வீரர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். யாராவது காயமடைந்தாலோ அல்லது சில மாற்றங்களை செய்ய வேண்டிய சூழல் வந்தாலோ 17 பேர் கொண்ட அணியை தேர்வு செய்திருப்பதன் மூலம் அதை நிவர்த்தி செய்து விட முடியும்’ என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:-

டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் பான்கிராப்ட், கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நேசர், பேட்டின்சன், பீட்டர் சிடில், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், வார்னர்.