இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்யும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு


இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்யும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 July 2019 12:01 AM GMT (Updated: 27 July 2019 12:01 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை கபில்தேவ் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்யும் என்று கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பம் அனுப்ப வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் ஒப்பந்தம் உலக கோப்பையுடன் முடிவடைந்தாலும், இடைக்கால ஏற்பாடாக வெஸ்ட இண்டீஸ் தொடருக்கு மட்டும் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்திய அணியின் பயிற்சியாளரை தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தான் தேர்வு செய்யும். ஆனால் இவர்கள் மீது ஒரே நேரத்தில், கிரிக்கெட் தொடர்பான அமைப்பில் இரட்டை பதவி வகிப்பதாக சர்ச்சை கிளம்பியதால் இந்த முறை அவர்கள் ஒதுக்கப்பட்டு விட்டனர்.

மாறாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கமிட்டியிடம் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை வழங்குவது என்று டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கபில்தேவ் தலைமையிலான கமிட்டியில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தான் கடந்த டிசம்பர் மாதம் பெண்கள் அணிக்கான பயிற்சியாளரையும் தேர்வு செய்திருந்தனர்.

இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘கபில்தேவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியினர் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். அனேகமாக ஆகஸ்டு மாதம் பிற்பகுதியில் பயிற்சியாளருக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். கமிட்டி அமைக்கும் விவகாரத்தில் கேப்டன் விராட் கோலி கருத்து எதுவும் சொல்லவில்லை’ என்றார்.

சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியோடு வெளியேறியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுமா? என்று வினோத்ராயிடம் கேட்ட போது, ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி 29-ந்தேதி புறப்படும் நிலையில், உலக கோப்பை தோல்வி தொடர்பாக ஆய்வு செய்ய எங்கே நேரம் இருக்கிறது? ஆனால் வழக்கமாக தொடர் முடிந்ததும் அணியின் உதவியாளர்கள் மற்றும் மேலாளர் வழங்கும் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.


Next Story