கிரிக்கெட்

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்? - கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல் + "||" + Will the hat-trick win the Chepauk Super Gillies? - Today's clash with Kovai Kings

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்? - கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்? - கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்புடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று கோவை கிங்சுடன் மோதுகிறது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லை சங்கர் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது.


தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் (41 ரன் வித்தியாசம்), காரைக்குடி காளை (54 ரன் வித்தியாசம்) அணிகளை பந்தாடியது.

அதே உத்வேகத்துடன் இன்று களம் காணும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

காரைக்குடிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கில்லீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூவும், கோபிநாத்தும் அரைசதம் அடித்ததோடு முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் திரட்டி அசத்தினர். இந்த சீசனில் ஒரு ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இது தான். முதல் 2 ஆட்டங்களில் தடுமாறிய கேப்டன் கவுசிக் காந்தியும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்.

பவுலிங்கில், சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி, முருகன் அஸ்வின், டி.ராகுல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். இதில் மலிங்கா சாயலில் பந்து வீசக்கூடிய பெரியசாமி கடந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக முத்திரை பதித்தது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சசிதேவ் நேற்று கூறுகையில், ‘கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டதால் வெற்றி கிட்டியது. கோவைக்கு எதிராகவும் இதே போன்று ஆடுவோம் என்று நம்புகிறேன். இதையொட்டி கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம்’ என்றார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் காயம் காரணமாக தாவித் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சுஷில் சேர்க்கப்பட்டுள்ளார்.

3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ள கோவை கிங்ஸ் அணியும் லேசுப்பட்டது அல்ல. தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் வீரர் அந்தோணி தாஸ் 7 சிக்சருடன் 63 ரன்கள் நொறுக்கியதை மறந்து விட முடியாது. கேப்டன் அபினவ் முகுந்த், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். ஐ.பி.எல்.-ல் விளையாடிய அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார். பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் கோவை கிங்ஸ், கில்லீசுக்கு எல்லா வகையிலும் சவாலாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் கில்லீசும், 2-ல் கோவையும் வெற்றி கண்டுள்ளன. இந்த சீசனில் நெல்லையில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

முன்னதாக மாலை 3.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அருண் கார்த்திக் தலைமையிலான மதுரை பாந்தர்சும், பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.