விராட் கோலி - ரோகித் சர்மா இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்கு காரணம் என்ன?


விராட் கோலி - ரோகித் சர்மா இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்கு காரணம் என்ன?
x
தினத்தந்தி 29 July 2019 8:26 AM GMT (Updated: 29 July 2019 8:26 AM GMT)

கிரிக்கெட் வட்டாரத்தில் சமீபத்திய பரபரப்பான விராட் கோலி - ரோகித் சர்மா மோதலுக்கான காரணங்கள் தற்போது கசிந்துள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது. 

ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும், கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்படுவதாகவும்  கூறப்பட்டது. விராட்-ரோகித் விரிசல் இப்போது அதிகரித்து இருப்பதாகவும்  இருவருக்குமான பனிப்போர் முற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார். விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்களது பிரச்சினை முற்றியுள்ளதாகத் தெரிகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி இடையிலான பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும்போது, இது உங்களால் உருவாக்கப்படும் கதை என்றார்.

விராட், அனுஷ்காவைப் பின் தொடர்வதில் இருந்து ரோகித் விலகினாலும், விராட் கோலி, ரோகித்தை பின்தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவர்களது பிரச்சினைக்கு வலுசேர்ப்பது போல அமைந்திருக்கிறது, சமீபத்தில் அனுஷ்கா சர்மாவின் வலைத்தள பதிவு.  புத்திசாலி மனிதன் இந்த நேரத்தில் அமைதியாகத்தான் இருப்பான். தவறான தகவல்கள்  வெளிவரும்போது உண்மையால் மட்டுமே மவுனத்துடன் கைகுலுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையிலான மனகசப்புக்கு என்ன காரணம் என தகவல் வெளியாகி உள்ளது 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. அனுமதியை மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்ததாக கூறப்பட்டது.

பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் அனுமதி இல்லாமல் மனைவியை தங்கவைத்த வீரர் குறித்து பிசிசிஐ விசாரணை நடத்தியது. அந்த வீரர் ரோகித் சர்மா என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ரோகித் தனது மனைவி மற்றும் மகளை தன்னுடனேயே 7 வார காலமும் தங்க வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயம் குறித்து கோலி, ரோகித் இடம் விசாரிக்கவே இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலக கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி நாடு திரும்பும் போதும் கூட, ரோகித் முன்னதாக தனது மனைவியுடன் தனியாக இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-ந்தேதி நடக்கிறது.  இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றிரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறது.

இருவருக்கும் இடையேயான பிரச்சினை அணியின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால், பிசிசிஐயின் சி.இ.ஓ. சில நாட்களில் அமெரிக்கா சென்று இருவரையும் நேரில் சந்தித்து சமாதானப்படுத்த உள்ளார். பிசிசிஐ நடத்த உள்ள இந்த பேச்சுவார்த்தையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story