ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனை..!


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனை..!
x
தினத்தந்தி 29 July 2019 8:44 AM GMT (Updated: 29 July 2019 11:31 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி 20 ஓவர் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஹோவ்,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஹோவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை எலிசி பெர்ரி 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 60-வது இன்னிங்சில் ஆடிய எலிசி பெர்ரி 42 ரன்னை தொட்ட போது 1,000 ரன்களை கடந்தார். ஆல்-ரவுண்டரான எலிசி பெர்ரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸிவர் விக்கெட்டை வீழ்த்திய போது 100-வது விக்கெட் இலக்கை எட்டி இருந்தார். இதுவரை எலிசி பெர்ரி 20 ஓவர் போட்டியில் 1,005 ரன்னும், 103 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுக்கு மேல் ஒரு சேர எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். வீரர்கள் யாரும் கூட இந்த இலக்கை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி 1,416 ரன்னும், 98 விக்கெட்டும் எடுத்து அடுத்த இடத்திலும், வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் 1,471 ரன்னும், 88 விக்கெட்டும் கைப்பற்றி அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.

சாதனை படைத்த எலிசி பெர்ரி கருத்து தெரிவிக்கையில், ‘இது மிகச்சிறந்த தருணம். ஆனால் இந்த சாதனையை கடந்த போது எனக்கு எதுவும் தெரியாது. நான் அதிக போட்டிகளில் ஆடியதால் இந்த இலக்கை எட்ட முடிந்ததாக கருதுகிறேன்’ என்றார்.


Next Story