கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி அபார வெற்றி - காரைக்குடி காளையை வீழ்த்தியது + "||" + TNPL Cricket: Dindigul Dragons won by 10 wickets

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி அபார வெற்றி - காரைக்குடி காளையை வீழ்த்தியது

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி அபார வெற்றி - காரைக்குடி காளையை வீழ்த்தியது
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நெல்லை,

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை மற்றும் நத்தத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.


இந்த போட்டி தொடரில் நெல்லையில் நேற்று இரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய காரைக்குடி காளையின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யபிரகாஷ், கேப்டன் அனிருதா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் அனிருதா அதிரடியாக அடித்து ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தொடக்க ஆட்டக்காரர் சூர்ய பிரகாஷ் 20 ரன்னிலும், அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அபாரமாக ஆடிய அனிருதா 59 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 98 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் முகமது வீசிய கடைசி பந்தில் ஹரி நிஷாந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காரைக்குடி காளை அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அஸ்வின்குமார் 1 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் ஆர்.ரோகித், முகமது தலா 2 விக்கெட்டும், ஜெ.கவுசிக், சிலம்பரசன், கேப்டன் ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் களம் கண்டனர். 2-வது ஓவரில் இருந்தே ஹரி நிஷாந்த் அதிரடியாக பந்தை நாலாபுறமும் விளாசி தள்ளினார். கெஜதீசன் அவருக்கு பக்கபலமாக நின்றதுடன் அடித்து ஆடினார். இருவரின் அபார ஆட்டத்தால் திண்டுக்கல் அணி வெற்றியை நோக்கி வேகமாக பயணித்தது.

17 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹரி நிஷாந்த் 56 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 81 ரன்னும், ஜெகதீசன் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் வீரர் ஹரி நிஷாந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். 4-வது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணி 4-வது வெற்றியை சொந்தமாக்கியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய காரைக்குடி காளை சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.