கிரிக்கெட்

டோனிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு + "||" + West Indies fast bowler Shelton Cottrell congratulates Dhoni

டோனிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு

டோனிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனிக்கு, வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக பணியாற்றி வருகிறார். வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இருந்து விலகி இருக்கும் டோனி தற்போது ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். டோனி ராணுவ பணியில் ஈடுபாடு காட்டி வருவதை வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் களத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் டோனி. அத்துடன் தேசப்பற்று கொண்டவரான அவர் ராணுவத்தில் பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயமாகும். ஜமைக்காவில் அனைவரிடமும் டோனி பற்றி எடுத்து கூறுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஷெல்டன் காட்ரெல் ஜமைக்கா ராணுவத்தில் பணியாற்றியவர். அவர் ஒவ்வொரு முறையும் விக்கெட் வீழ்த்தும் போதும் மைதானத்தில் ராணுவ வீரர் போல் சல்யூட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட்இண்டீசில் நடைபெறும். இந்த போட்டி தொடர் குறித்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடர் எப்பொழுதும் அதிரடி ஆட்டம் நிறைந்ததாகவே இருக்கும். இந்த முறையும் அதனை தான் நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய வெஸ்ட்இண்டீஸ் அணியின் பார்மை பார்க்கையில் நிச்சயம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்’ என்றார்.

* வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடருக்கான இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள ராகுல் சாஹர் அளித்த ஒரு பேட்டியில், ‘வெஸ்ட்இண்டீஸ் தொடரில் அதிகாலை 4 மணியளவில் தூங்கி கொண்டிருந்த போது எனது செல்போனில் திடீரென இடைவிடாமல் அழைப்புகளும், வாழ்த்துகளும் வந்து குவிந்த போது தான் அணிக்கு தேர்வான விஷயம் தெரிந்தது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று நினைக்கவில்லை. இந்திய ‘ஏ’ அணியில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து தேர்வாளர்கள் வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். முடிவை பற்றி சிந்திக்காமல் எப்பொழுதும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் முழு திறனையும் வெளிப்படுத்துவேன். இந்திய அணியில் இடம் பிடித்ததை பெருமையாக கருதுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் கேப்டனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயல்படமாட்டேன். நானும், எனது சொந்தக்காரரான தீபக் சாஹரும் இந்திய அணியில் ஒரேநேரத்தில் ஆடும் லெவனில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்று எங்கள் மாமா அடிக்கடி சொல்வது உண்டு. அந்த கனவு விரைவில் நனவாகும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.